காவல் துறையினர் ஹெச். ராஜாவிடம் அண்ணாச்சி, அண்ணாச்சி என்று பழகுவதால் கைது, விசாரணை முறையாக இருக்காது என்று வழக்கறிஞர் முறையீடு செய்ததில் உயர் நீதிமன்றம் புது உத்தரவிட்டது.
புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்றத் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஹெச். ராஜா உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் அவரைக் கைது செய்ய வேண்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
உயர் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர் நீதிமன்றத்தில் சுமோட்டோ வழக்கு எடுக்கும் கோரிக்கை ஒரு அமர்வில் நிராகரிக்கப்பட்டு இன்னொரு அமர்வு தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது.
''வேறொரு நீதிபதியைத்தானே விமர்சித்தார் அவர் பார்த்துக்கொள்வார், அவர் விமர்சித்தது மதுரை கிளையின் கீழ் வரும். அவர்கள் வழக்கு தொடுக்கட்டும், அரசு பார்த்துக்கொள்ளும், பொலிஸ் பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிட முடியாது'' என்று நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு தெரிவித்து எதிா்வரும் ஒக்டோபர் 22க்குள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஹெச். ராஜாவைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந் நிலையில் அவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் கூட்டத்தில் கலந்துகொண்டார். ''சிங்கம் இங்க இருக்கு முடிந்தால் கைது செய்யுங்கள்'' என்று பேசினார்.
இந்நிலையில் ஹெச். ராஜாவைக் கைது செய்யாததை அடுத்து அவரைக் கைது செய்ய வழக்கறிஞர் சூரியப்பிரகாசம், ''ஹெச். ராஜாவைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காவல்துறையினரே அண்ணாச்சி, அண்ணாச்சி என ராஜாவுடன் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் விசாரணை முறையாக இருக்காது'' என முறையீடு செய்தார்.
இது குறித்து நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் அமர்வு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், கோரிக்கை தொடர்பாக காவல்துறையை அணுகுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட விசாரணை நீதிமன்றத்தையும் அணுகுங்கள்'' என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
Add new comment