அரசியல் கைதிகள் விடுதலை நல்லிணக்கத்துக்கு வலு சேர்க்கும் | தினகரன்

அரசியல் கைதிகள் விடுதலை நல்லிணக்கத்துக்கு வலு சேர்க்கும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் கைதிகளில் சிலர் கடந்த வெள்ளியன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.

யுத்தம் முடிவுற்று 09 வருடங்கள் கடந்த பின்னரும் சிறையில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள இந்தக் கைதிகள், தமக்கு குறுகிய காலம் புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் ஒருவரின் உடல்நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து அக்கைதி உடனடியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்தக் கைதிகளை கடந்த ஞாயிறன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிலொன்றாக விளங்கும் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பெருநகரங்கள் மற்றும் மேல் மகாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

அந்தச் செய்தியாளர் மாநாட்டில் 'நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தினரின் முன்னாள் உறுப்பினர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார் அவர்.

அதேநேரம் 'யுத்தம் முடிவுக்கு வந்து 09 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பயங்கரவாத பிரச்சினையைக் காட்சிப்படுத்தி அரசியல் செய்யவோ இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு செயற்படவோ இனியும் இடமளிக்கக் கூடாது. எமக்கு நல்லிணக்கம் தொடர்பில் முன்னுதாரணம் வழங்குகின்ற தென்னாபிரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் நல்லிணக்க பொறிமுறையின் பிரதான அம்சமே பொதுமன்னிப்புத்தான். இதனை இலங்கை விடயத்திலும் கையாள வேண்டும்' என்றும் வலியுறுத்தி இருக்கின்றார் அமைச்சர்.

உண்மையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் இந்த வலியுறுத்தல் நியாயமானதும் யதார்த்தபூர்வமானதும், காலத்துக்கு அவசியமானதுமான கோரிக்கை ஆகும்.

நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் பரந்த அடிப்படையில் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்குநாள் நம்பிக்கையையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்பட்டு வருகின்றன.

என்றாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் யுத்தம் முடிவுற்று 09 வருடங்கள் கடந்த பின்னரும் தடுப்புக் காவலில் இருப்பது அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்.

ஆனால் அவர்களது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து பொதுமன்னிப்பு வழங்குவது நல்லிணக்க வேலைத் திட்டங்களுக்கு உத்வேகம் அளித்து வலுப்படுத்தக் கூடியதாக அமையும். அத்தோடு மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைக் களைந்து நம்பிக்கைகளை மேலும் வளர்க்கவும் வழிவகுக்கும். இதுவும் சகவாழ்வும் நல்லிணக்கமும் தழைத்தோங்கப் பக்க துணையாக அமையும்.

மேலும் இலங்கையானது இன முரண்பாடு நிலவிய ஒரு நாடு என்ற பார்வை சர்வதேசத்தில் உள்ளது. அப்பார்வையின் விளைவாக இந்நாடு பல்வேறு அழுத்தங்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் முகம் கொடுத்தது. இருந்தும் அவற்றைக் கடந்த கால ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ளாது செயற்பட்டனர். அதன் விளைவாக நாடே பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தது.

இவ்வாறான சூழலில் நாட்டு மக்கள் 2015 இல் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தோடு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், கடந்த ஆட்சியாளர்கள் கையாண்ட தவறான அணுகுமுறைகளால் ஏற்கனவே ஏற்பட்டிருந்த பாதிப்புகளை சீரமைப்பு செய்துள்ளது. இதன் விளைவாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நல்லாட்சி அரசாங்கம் ஆதரவையும் நல்லபிமானத்தையும் பெற்று வருகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவுற்ற 09 வருடங்கள் கடந்த பின்னரும் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதானது அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்று வரும் ஆதரவு மற்றும் நல்லபிமானத்தில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்.

மேலும் இந்த நாடு தொடர்ந்தும் வளர்முக நாடாகவோ மூன்றாம் மண்டல நாடாகவோ இருக்க முடியாது என்ற நல்ல நோக்கில்தான் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ளது. இந்த அபிவிருத்திப் பாதையில் இன,மத,மொழி,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரு-ம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றாகப் பயணிப்பது அவசியம்.

ஆகவே அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருக்கும் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது. நாட்டில் சகவாழ்வு, நல்லிணக்கத்தை உண்மையாக விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது. நாட்டின் சுபீட்சத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அமைச்சரின் இந்த கோரிக்கையும் யோசனையும் பக்க துணையாகவும் அமைய முடியும்.


Add new comment

Or log in with...