3rd Match: SLvAFG; ஆப்கானிஸ்தான் வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை | தினகரன்

3rd Match: SLvAFG; ஆப்கானிஸ்தான் வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை

3rd Match: SLvAFG; ஆப்கானிஸ்தான் வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை-3rd Match-SLvAFG-AFG won by 91 Runs-SL knocked out from Asia Cup

 


ஆப்கானிஸ்தான் 91 ஓட்டங்களால் வெற்றி

ஆசிய கிண்ணத் தொடரில் நேற்றைய தினம் (17) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில், ரஹ்மத் ஷாஹ் 72 ஓட்டங்களையும், இஹ்சானுல்லாஹ் 45 ஓட்டங்களையும், ஹஸ்மதுல்லாஹ் ஷஹீதி 37 ஓட்டங்களையும், மொஹம்மட் ஷஷாட் ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் திசர பெரேரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சிற்கு முகம்கொடுக்க முடியாமல் தடுமாறினர்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான, குசல் மெண்டிஸ் எவ்வித ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தார். இத்தொடரில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியிலும் அவர் எவ்வித ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையில், சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியாத நிலைக்கு இலங்கை அணி வீரர்கள் தள்ளப்பட்டு, குறைந்த ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். 

இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 36 ஓட்டங்களையும், திசர பெரேரா 28 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்திவ்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில், ரஷீத் கான், குல்பதின் நைப், மொஹம்மட் நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியதோடு, B பிரிவிலுள்ள இரு அணிகளுடனும் தோல்வியுற்ற இலங்கை அணி, இத்தொடரிலிருந்து அடுத்த சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இது வரை இடம்பெற்ற ஆசிய கிண்ணங்களில் இலங்கை அணி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் போட்டியிடாது வெளியேறும் சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இத்தொடரில் இந்திய அணி எவ்வித போட்டிகளுக்கும் முகம் கொடுக்காத நிலையில், இலங்கை அணி இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணி, ஒரு நாள் போட்டியொன்றில் இலங்கை அணியை வெற்றி கொண்டது இதுவே முதல் தடவையாகும்.

போட்டியின் நாயகனாக, ரஹ்மத் ஷாஹ் தெரிவானார்.

இத்தொடரை அடுத்து, இலங்கை அணி, இங்கிலாந்து அணியுடன் 5 ஒரு நாள், ஒரு ரி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்தொடரை அடுத்து, இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரங்கன ஹேரத் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி:
இந்தியா எதிர் ஹொங்கொங் - துபாய் 5.00pm

ஆப்கானிஸ்தான் 249/10 (50.0)
ரஹ்மத் ஷாஹ் 72 (90)
இஹ்சானுல்லாஹ் 45 (65)
ஹஸ்மதுல்லாஹ் ஷஹீதி 37 (52)
மொஹம்மட் சஷாட் 34 (47)

திசர பெரேரா 5/55 (7.0)
அகில தனஞ்சய 2/22 (10.0)

இலங்கை 158/10 (41.2)
உபுல் தரங்க 36 (64)
திசர பெரேரா 28 (36)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 22 (39)

ரஷீத் கான் 2/26
குல்பதின் நைப் 2/29
மொஹம்மட் நபி 2/30
முஜிபுர் ரஹ்மான் 2/32

போட்டியின் நாயகன்: ரஹ்மத் ஷாஹ் 

 


Add new comment

Or log in with...