கரிபியன் பிரீமியர் லீக்: சம்பியனானது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் | தினகரன்

கரிபியன் பிரீமியர் லீக்: சம்பியனானது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ்

கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஒட்டங்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ஒட்டங்களை குவித்தார். ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

148 ஒட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெகல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ஒட்டங்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார். அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ஒட்டங்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ஒட்டங்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார். கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சம்பியன் பட்டத்தையும் வென்றது.


Add new comment

Or log in with...