பொலிஸாரால் தேடப்படும் எச்.ராஜா பண்ணை வீட்டில் இருப்பது ஊர்ஜிதம் | தினகரன்

பொலிஸாரால் தேடப்படும் எச்.ராஜா பண்ணை வீட்டில் இருப்பது ஊர்ஜிதம்

பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையான பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் தங்கி இருக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. கடந்த சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத பொலிசையும், நீதிமன்றத்தையும் எச்.ராஜா கொச்சையாகத் திட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் கைது செய்யப்படவுள்ளார். அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பொலிஸ் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை பொலிஸ் தேடி வருகிறது. அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படை பிரிவு பொலிஸ் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராஜா நேற்றுமுன்தினமே தலைமறைவாகி விட்டார். நேற்றுமுன்தினம் காலையில் மன்னார்குடியில் இருந்த நிலையில் இரவோடு இரவாக அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதனால் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உஷார் நிலையில் பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

ராஜா உண்மையில் எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்தது.பொலிஸ் அவருடன் இருந்த போது அவர் எப்படி தப்பித்துச் சென்றார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அவர் தனது பண்ணைவீட்டில்தான் தங்கி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காரைக்குடியில் உள்ள கண்டனூர் பகுதியில் அவரது பண்ணைவீடு இருக்கிறது. இதன் பெயர் ஸ்ரீ லலித்ராஜ் கார்டன் ஆகும். அங்குதான் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக சென்று தங்கி உள்ளார் எச்.ராஜா.

அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வழக்கமாக பாதுகாப்பு அளிக்கும் பொலிஸார் உடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது பண்ணை வீட்டுக்குள் ெபாலிஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்பதும், அந்த பண்ணை வீடும், வெளியே பொலிஸ் வாகனம் நிற்பதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஏற்கனவே எஸ்.வி சேகருக்கு இப்படி பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...