மனித உரிமை விசாரணைக் குழுவை அனுமதிக்க மஹிந்த மறுத்தது ஏன்? | தினகரன்

மனித உரிமை விசாரணைக் குழுவை அனுமதிக்க மஹிந்த மறுத்தது ஏன்?

டில்லியில் வைத்து முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறாரா?

2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தில் யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர் மஹிந்த ராஜபக்‌ஷ.

இலங்கையில் நடத்தப்பட்ட அந்த கொடூரமான போருக்கு இந்திய அரசின் ஆயுத உதவி மற்றும் உறுதுணையும், மத்திய அரசில் அங்கம் வகித்த அப்போதைய தமிழக அரசின் ஆதரவும் இருந்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

தமிழர்கள் யாரும், அவ்வளவு எளிதில் அந்தப் போரை மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் போரின் போது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது.

சுமார் 30 ஆண்டு காலமாக போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை அடியோடு ஒழித்த பெருமை ராஜபக்‌ஷவைச் சேரும். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது நினைவிருக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு போரை நடத்தி முடித்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. தலைமையில் செயல்படும் 'விராட் இந்துஸ்தான் சங்கம்' ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தார்.

மேலும், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் ராஜபக்‌ஷ சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜபக்‌ஷவின் மகனுமான நாமல் ராஜபக்‌ஷவும் வந்திருந்தனர்.

இந்தச் சந்திப்புகளின் போது என்ன பேசப்பட்டது என்பது பற்றி தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.நிகழ்ச்சியின் போது பேசிய ராஜபக்‌ஷ 'இந்தியா_ - இலங்கை உறவுகள்' என்ற தலைப்பில்உரையாற்றினார். அப்போது, இலங்கை இறுதிக்கட்டப் போர் பற்றிக் குறிப்பிட்ட ராஜபக்‌ஷ , "இந்தியாவுடன் நட்புறவு நிலவுகிறது" என்றும், "இரு நாடுகளுக்கும் இடையேயான வெளியுறவுக் கொள்கை மிகப்பெரிய தூண் போன்ற உறுதியுடையது" என்றும் குறிப்பிட்டார்.

"இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது, இந்தியா தெரிவித்த கவலை மிகவும் உணர்வுபூர்வமானது" என்று தெரிவித்த அவர், "அப்போது இந்திய அரசுடனும், இதர அண்டை நாடுகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.

இதற்கான இலங்கை மற்றும் அண்டை நாடுகளின் உயர் அதிகாரிகளைக் கொண்டு குழு அமைக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். அந்தக் குழுவில் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் சிவசங்கர் மேனன், அப்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இந்தியத் தரப்பில் இடம்பெற்றிருந்ததாக ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இந்தியா_ - இலங்கை இடையேயான உறவுகள் தொடர்பாக அதிகாரிகள் குழு அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். "இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார, சமூகரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போரின் போது செயல்பட்டதைப் போன்று ஒரு நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

இலங்கையில் 2009-இல் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் என்பது, தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும், இராணுவ நடவடிக்கை அப்பாவி மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை என்றும் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே தெரியாமல் அழித்த பின்னர், தற்போது ஓர் இனத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல என்றும், தமிழர்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தமது தலைமையிலான இலங்கை அரசு நடத்தவில்லை என்றும் தெரிவித்திருப்பது தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இறுதிக்கட்டப் போரின் போது, போர்க்குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் ராஜபக்‌ஷ தமது உரையில் குறிப்பிட்டார்.

இதுகுறித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தனது கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இலங்கையில் 2009-ம் ஆண்டு இடம்பெற்ற போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்தது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது. அதுகுறித்து பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது ஐ.நா மனித உரிமை ஆணையராக இருந்த நவநீதம்பிள்ளை, நேரடியாக இலங்கைக்குப் போய், நிலைமையைப் பார்த்து விட்டு வந்து, அவர் வெளியிட்ட அறிக்கையிலும் அதைத்தான் வலியுறுத்தியிருக்கிறார்.

'பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும். அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்று சொன்ன போது, ஐ.நா மனித உரிமை ஆணையத்தை விசாரிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்று இதே ராஜபக்‌ஷ சொல்லி விட்டார்.

இப்போது 'போர்க்குற்றமே நடக்கவில்லை' என்று சொன்னால் எப்படி? ஐ.நா. மனித உரிமை ஆணையம் என்பது ஒரு தனிநபர் அல்ல. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கின்றது. அதை மீறிப் போர்க்குற்றம் நடக்கவில்லை என்று சொன்னால், மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் கமிஷனை அனுமதிக்க மறுப்பது ஏன்? போர்க்குற்றம் நடக்கவில்லை என்றால், தாராளமாக விசாரணை நடத்துங்கள் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.

மேலும், பிரிட்டிஷ் பொதுநலவாய பிரதமர்களின் மாநாடு கொழும்பில் நடைபெற்ற போது, பிரிட்டன் பிரதமர் அங்கு சென்றார். அவர் நேரடியாக யாழ்ப்பாணம் சென்ற போது ஆயிரக்கணக்கான தாய்மார்கள் கூடி, தங்களின் கணவரைக் காணோம்; மகன்களைக் காணோம் என்று கூறி புகைப்படங்களைக் காட்டி புகார் செய்தார்கள்.

'கைது செய்து கொண்டுபோகப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதையே சொல்ல மறுக்கிறார்கள்' என்று தெரிவித்தனர் அம்மக்கள்.

பிரிட்டிஷ் பிரதமர் கொழும்பு திரும்பிய பின்னர் ராஜபக்‌ஷவை அவர் கண்டித்தார்.

'உடனடியாக அவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என்றார். லண்டனுக்குத் திரும்பிச் சென்ற பிறகும் கூட பிரிட்டிஷ் பிரதமர் பகிரங்கமாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிப் பேசினார்.

'காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலை இலங்கை அரசு வெளியிட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் போன்ற பொது அமைப்புகள் இதுகுறித்து விசாரணை நடத்தின. வெளிநாடுகளில் வாழக் கூடிய ஈழத் தமிழர்கள், அந்தப் போரின் போது உயிர் தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் எல்லாம் மேற்கண்ட தீர்ப்பாயங்களில் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை எல்லாம் அளித்திருக்கிறார்கள்.

'போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று இரண்டு தீர்ப்பாயங்களும் சொல்லியுள்ளன.

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ராஜேந்திர சச்சாரும் அங்கம் வகித்தார். இரண்டு நீதிபதிகளில் அவரும் ஒருவர். இதையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்று அவரும் சேர்ந்துதான் சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் சொன்ன பிற்பாடும் ராஜபக்‌ஷ, போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மழுப்பல் போன்றதாகும்." இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் நெடுமாறன்.

(விகடன்)


Add new comment

Or log in with...