ஜனாதிபதி, கோத்தாபய உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் சலசலப்பு | தினகரன்

ஜனாதிபதி, கோத்தாபய உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் சலசலப்பு

ஜனாதிபதி, கோத்தாபய உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் சலசலப்பு-Long Debate About President-Gotabaya Life Threat

 

(மகேஸ்வரன் பிரசாத்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விடயம், பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.

இன்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லையென எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து, பொது வேட்பாளராகக் களமிறங்கியபோது ஜனாதிபதியின் பாதுகாப்பை நீக்கியவர்கள் தற்பொழுது அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பற்றி அக்கறை கொள்வதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கண்டியில் நாமல் குமார என்ற நபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தினேஷ் குணவர்த்தன வினவினார்.

இந்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த ஆதாரங்கள் அடங்கிய நாமல் குமார என்பவரின் கையடக்கத் தொலைபேசி குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் நீதிமன்றத்தினால் ஊடகங்களிடம் ஒளிப்பதிவுகள் கோரப்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அதற்குப் பதிலளித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, பாதாள உலகக் குழுவுடன் குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தொடர்பு உள்ளது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாமல் குமார என்ற நபர் முன்வைத்துள்ளார். இவ்வாறான நிலையில் பிரதிப் பொலிஸ்மா அதிபரை கைது செய்யாது எவ்வாறு பக்கச்சார்பற்ற விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என கேள்வியெழுப்பினார்.

முதற்கட்ட விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக எடுக்கக் கூடிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் கூடிய விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பதில் வழங்கினார்.

விமல் வீரவன்சவின் கருத்தைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

மஹிந்த அணியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து கருத்துக்களை கூற முற்பட்டனர்.

டளஸ் அளகப்பெரும எம்பி, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது முக்கியமான பிரிவு என்பதால் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்படுவதாக ஷெஹான் சேமசிங்க எம்பி கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை சபைக்கு வழங்குவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் தெரிவித்தார். விசாரணையொன்று நடைபெறும்போது அது பற்றிய முழுமையான தகவல்களையும் பகிரங்கப்படுத்துவதில்லை. சாட்சியங்களுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதும் அவை பற்றி அறிவிக்க முடியும் என்றார்.

"ஜனாதிபதி பொது வேட்பாளராகக் களமிறங்கியபோது அவருடைய பாதுகாப்பு விலக்கப்பட்டபோது அதுபற்றி யார் இங்கு குரல் எழுப்பினர். அப்பொழுது இந்த அக்கறை இருந்ததா?" என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

நீண்ட நேரம் இடம்பெற்ற இவ்வாத பிரதிவாதங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்க நேரம் கோரியபோதும், சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.

இவ்விவகாரம் குறித்து கேள்விப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தொடர்புகொண்டு வினவியதாகவும், நேற்றையதினம் (17) பொலிஸ்மா அதிபரை அழைத்து நீண்டநேரம் இது பற்றி கேட்டறிந்து கொண்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டே சகல தரப்பினருக்கும் கருத்துத் தெரிவிக்க இடமளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...