காதலர் தினத்திலும் மரநடுகை ஊக்குவிக்கப்பட வேண்டும் | தினகரன்

காதலர் தினத்திலும் மரநடுகை ஊக்குவிக்கப்பட வேண்டும்

காதலர் தினத்திலும் மரநடுகை ஊக்குவிக்கப்பட வேண்டும்-President Call to Protect Environment

 

- ஒக்டோபரில் தேசிய மரநடுகை வாரம்
- நாடு பூராக 30 இலட்சம் மரங்களை நடுவதற்கு செயற்றிட்டம்
- சூழலை பாதுகாக்க 
ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு

தேசிய மரநடுகை வாரத்தில் சகல இல்லங்களிலும் குறைந்தது ஒரு மரத்தையேனும் நடுகை செய்து  சூழலை பாதுகாப்பதற்கான தனது கடமையை நிறைவேற்ற சகலரும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

புவி மேற்பரப்பில் காணப்படும் தாவரங்களே மனிதனின் எதிர்கால இருப்பினை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சூழலை பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சகல மக்களும் இவ்வருட தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் கைகோர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (17) பிற்பகல் அவ்வமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மரநடுகை வாரத்தில் நாடு பூராகவும் 30 இலட்சம் மரங்களை நடுவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியின் வழிகாட்டலில் சுற்றாடல் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அச்செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மரங்களை நாட்டுதல் ஒரு தினத்திற்கோ அல்லது வாரத்திற்கோ மட்டுப்படுத்தப்பட கூடாது என்பதுடன், இயற்கையை நேசிக்கும் மனிதர்களாக அந்த பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

வாழ்க்கையின் சகல விசேட நிகழ்வுகளின்போதும் மரங்களை நடுவதற்கு மக்களை பழக்கப்படுத்துதல், காதலர் தினத்தின்போது அச்சோடிகள் இணைந்து மரமொன்றை நடுதல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர்ப்பாசன செயற்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. உமா ஓய செயற்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்தி அடுத்த வருட ஆரம்பத்தில் அதன் பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

மகாவலி காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும், தற்போது பாவனையில் இல்லாத  கட்டிடங்களை வேறு அரச நிறுவனங்களுக்கு வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்களை இனங்கண்டு உரிய நிறுவனங்களுக்கு அவற்றை வழங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளதாக பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாவென கண்டறிந்து அது தொடர்பில் துரித அறிக்கை ஒன்றினை தனக்கு வழங்குமாறும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 


Add new comment

Or log in with...