கூட்டு எதிரணிக்குள் மேலும் விரிவடையும் பிளவுகள் | தினகரன்

கூட்டு எதிரணிக்குள் மேலும் விரிவடையும் பிளவுகள்

ராஜபக்ஷக்களின் கொடுங்கோன்மை நிறைந்த பத்து வருட கால ஆட்சி வீழ்த்தப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவு பெறுவதற்கு இன்னும் சுமார் நான்கு மாதங்களே மீதமிருக்கின்றன.இப்போது, அடுத்த தேர்தலைப் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் அரசியல்களம் பரபரப்பு அடைந்துள்ளது.

2020 இல் நடைபெறப் போகின்ற தேர்தலில் பெரும்பான்மையின சமூகம் எந்தத் தரப்புக்கு ஆதரவளிக்கும் என்பதையிட்டு எவ்வித ஊகங்களுக்கும் வர முடியாதபடி தென்னிலங்கையின் இன்றைய அரசியல் சூழல் காணப்படுகின்றது.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்கள் முற்றுமுழுதாகவே ராஜபக்ஷக்களின் ஆட்சியின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தனர். பெரும்பான்மையின மக்களில் கணிசமானோரும் மஹிந்த ஆட்சி மீதான வெறுப்பையும், மைத்திரி-_ ரணில் கூட்டணி மீதான ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும் இவ்வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது மக்களின் மனோநிலையில் சிறுமாற்றத்தை அவதானிக்க முடிந்தது. உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகளை நன்கு ஆராய்கின்றபோது, மஹிந்த அணியினரை ஆதரித்தோரை விட அதனை எதிர்த்தோரின் எண்ணிக்கையே அதிகமென்ற யதார்த்தம் உண்மைதான்.

எனினும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் மஹிந்த அணி பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் இப்போதைக்கு நம்பும்படியான கூற்றாகத் தென்படவில்லை.

அரசியலைப் பொறுத்த வரை எழுச்சியும் வீழ்ச்சியும் இயல்பானவை என்பது உண்மை!

இவ்வருடம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் ஈட்டிக் கொண்ட நம்பிக்கையை சமீப காலத்தில் மஹிந்த அணியினர் பெருமளவில் இழந்து விட்டதையே களநிலைவரங்கள் புலப்படுத்துகின்றன.

கொழும்பை முற்றுகையிடப் போவதாக மஹிந்த அணியினர் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பியிருந்த விம்பம் ஒரே நாளில் சரிந்து வீழ்ந்தமை கூட்டு எதிரணிக்கு ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி எனலாம்.

கொழும்பு முற்றுகைப் போராட்டம் தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் உள்ளோர் ஒவ்வொருவரும் வெவ்வேறான குறிக்கோள்களைக் கொண்டிருந்தனரென்ற உண்மையை ‘ஜனபலய’ போராட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கு தனது புதல்வரான நாமல் ராஜபக்ஷவை அரசியல் அரங்கில் முன்னிலைப்படுத்துவதாக இருந்தது. கொழும்புக்கு ஆட்களை அழைத்து வரும் போராட்டத்தை நாமல் ராஜபக்ஷ முழுமையாகத் திட்டமிட்டதன் நோக்கமும் இதுதான்.

பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்றை அரசுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி முடிப்பதன் மூலம் ‘மஹிந்தவின் அடுத்த வாரிசு’ என்ற அடையாளத்தை தன்மீது பொறித்துக் கொள்வதற்கு நாமல் ராஜபக்ஷ முற்பட்டார். இதேசமயம் கூட்டு எதிரணிக்குள் உள்ள மற்றைய தரப்பினரின் இலக்கு வேறாக இருந்தது.

அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, பதவிகளைப் பிடித்துக் கொள்வது மட்டுமே ஏனையோரின் திட்டம்!

இவ்வாறு வேறுபட்ட குறிக்கோள்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனபலய’ போராட்டம் மதுவெறியும் ஆடல்பாடலும் கொண்ட கேளிக்கைக் கூத்தாக முடிவடைந்தமை கூட்டு எதிரணியினருக்கு மக்கள் மத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி விட்டது.

‘ஜனபலய’ போராட்டத்தின் தோல்வியினால் ஏற்பட்ட சலசலப்பு தணிவதற்கிடையில், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் இப்போது பூதம் போலக் கிளம்பியிருக்கிறது.

எதிர்வரும் 2020 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படப் போகின்றாரென்ற செய்தியினால் கூட்டு எதிரணிக்குள் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரர் ஒருவரையே களமிறக்கப் போவதாக இந்தியாவில் வெளியிட்ட கருத்தானது கூட்டு எதிரணிக்குள் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு வெறுப்பையும் விரக்தியையும் உண்டாக்கியிருக்கின்றது. அதேசமயம் மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது புதல்வர் நாமல் ராஜபக்ஷவை அழைத்துச் சென்றிருந்தமை இன்றைய சூழலில் வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னிறுத்தப்படுவதே கூட்டு எதிரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களின் வெறுப்புக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

கூட்டு எதிரணிக்குள் தற்போது அங்கம் வகிக்கின்ற அத்தனை பேருமே ராஜபக்ஷக்களின் உண்மையான விசுவாசிகள் அல்லர். ராஜபக்ஷ முகாம் என்பது பலரைப் பொறுத்தவரை ஒரு அரசியல் புகலிடம் ஆகும். அரசியல் போக்கிடம் எதுவுமே இல்லாதோருக்கு அடைக்கலம் அளிக்கின்ற ஒரெயொரு இடமாக மஹிந்த அணி விளங்குகின்றது.

இவர்கள் எல்லோருமே மஹிந்த விசுவாசிகள் அல்லர்! அம்முகாமில் உள்ள இடதுசாரி சிந்தனை கொண்ட ஒருசிலரிடமும் கூட மஹிந்த விசுவாசம் கிடையாது. எனவேதான் அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வரக் கூடாதென விரும்புகின்றனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் அல்லாத, கூட்டு எதிரணிக்குள் உள்ள வேறொரு சிரேஷ்ட முக்கியஸ்தர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து அங்கு மேலோங்கியிருப்பதற்கான காரணமும் அதுதான். ஜனபலய போராட்ட தோல்வியைத் தொடர்ந்து கூட்டு எதிரணிக்குள் தோன்றிய இரண்டாவது வீழ்ச்சியாகவே ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சையை அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். ஜனபலய மற்றும் வேட்பாளர் விவகாரம் ஆகிய இரண்டுமே மஹிந்த அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுக்கான இரண்டு முக்கிய அறிகுறிகள் என்பதே அரசியல் பொதுவெளியில் நிலவுகின்ற கருத்தாக உள்ளது. இப்பிளவானது எதிர்வரும் தேர்தல்களில் கூட்டு எதிரணிக்கு வெற்றியைத் தேடித் தரப் போவதில்லை என்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.


Add new comment

Or log in with...