சிவாஜிலிங்கத்திற்கு வீசா வழங்க இந்தியா தொடர்ந்தும் மறுப்பு | தினகரன்

சிவாஜிலிங்கத்திற்கு வீசா வழங்க இந்தியா தொடர்ந்தும் மறுப்பு

 

இந்தியாவிற்குச் செல்லும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அணி யில் இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா நுழைவதற்கான வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத்தில் இடம்பெறும் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான அனுபவப் பகிர்வு மற்றும் முன்னுதாரணங்கள் கொண்ட ஒரு வாரகாலப் பயணத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் அலுவலர்கள் இந்தியா செல்ல ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உள்வாங்கப்பட்டிருந்த மாகாண அமைச்சர் சிவநேசன் எதிர் வரும் 18ஆம் திகதி நீதிமன்ற வழக்கு காரணமாகத் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார்.

எஞ்சிய 10 பேரில் 9 பேரிடம் அலுவலக கடவுச் சீட்டு உள்ளதால் பயணத்தின்போது விமான நிலையத்தில் அனுமதியைப் பெற முடியும். அதேநேரம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திடம் தற்போதுவரையில் சாதாரண கடவுச் சீட்டே உள்ளதால் காரணமாக இந்தியப் பயணத்திற்கான நுழைவு விசா கோரி கடந்த 4ஆம் திகதி யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், சிவாஜிலிங்கத்திற்கான விசா அனுமதி நேற்று மாலை வரையில் வழங்கப்படாமல் பயண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.கே. சிவாஜிலிங்கம், 2008 - 2009 காலப்பகுதியில், யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, இந்தியாவின் புது டில்லியிலுள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால், ஆர்ப்பாட்டம் நடாத்தியமை தொடர்பிலேயே தனக்கு இந்தியா செல்வதற்கான விசா தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அடிப்படையில் இம்முறையும் தனக்கு வீசா கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளிற்கு ஆதரவானவர் என்ற நிலையில் சிவாஜிலிங்கத்திற்கான விசா நீண்டகாலமாக மறுக்கப்படுவதோடு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை மருத்துவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, விமான நிலையத்திலே அவர் திருப்பி அனுப்பியனுப்பப்பட்டிருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...