முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்த மேற்கத்தேய உலகம் கங்கணம் | தினகரன்

முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்த மேற்கத்தேய உலகம் கங்கணம்

 

மேற்கத்தேய உலகம், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றது.

இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் விழிப்பாக இருக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் 03ஆவது பொது பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்ட வாறு கூறினார்.

ஆசிரிய ஆலோசகரும், ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் தலைவருமான ஏ.எல்.எம். முஸ்தபா தலைமையில் விழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஆண்களுக்கு நிகராக பெண்களும் தமது சமய ஒழுக்க விழுமியங்களுடன் சகல துறைகளிலும், செயற்படுகின்றார்கள். பல்லின சமூகத்துடன் இணைந்து வாழும் நாம் சில செயற்பாடுகளில் நெகிழ்வுத் தன்மையுடன் தூர நோக்குடன் செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது இலக்கை அடைய முடியும். பெண்கள் இன்று உயர் கல்வித் துறையிலும் சட்டத் துறையிலும் மருத்துவத் துறையிலும் ஈடுபட்டு ஆளுமையுடன் செயற்படுகின்றார்கள்.

முஸ்லிம் பெண்களின் மேற்படிப்பு கல்வி நிறுவனமாக இலங்கையின் நாலா பாகங்களிலும் கலங்கரை விளக்கமாக காணப்படுகின்ற இக் கல்லூரியை அபிவிருத்தி செய்வதற்கு என்னாலான ஒத்துழைப்புகளை வழங்குவேன். ஒரு கிராமத்தின் வளர்ச்சியும் சமூகத்தின் வளர்ச்சியும் அக்கிராமத்தில் உருவாகின்ற கல்வியாளர்களிலேயே தங்கியுள்ளது. சமூகத் தலைவர்கள் தமது ஆளுமையை வளர்த்துச் சமூகத்தை வழிநடத்தும் அறிவாற்றல் உள்ளவர்களாக மாற வேண்டும். இதன் மூலம் சமூகம் வளரும் என்றார்.

(ஒலுவில் விசேட, ஒலுவில் தினகரன் நிருபர்கள்)

 


Add new comment

Or log in with...