மஹிந்த அணிக்குள் உருவான புயல்! | தினகரன்

மஹிந்த அணிக்குள் உருவான புயல்!

எதிர்வரும் 2020 இல் நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் யாரெனத் தீர்மானிப்பதற்கு முன்னரே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணிக்குள் புயல் வீசத் தொடங்கி விட்டது.

வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் விடயத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் மாத்திரமே ஏற்கனவே உச்சக்கட்ட முரண்பாடு தலைதூக்கியிருந்தது. இப்போது இந்த சர்ச்சையானது ராஜபக்‌ஷ குடும்ப வட்டத்தின் எல்லையையும் தாண்டி, கூட்டு எதிரணிக்குள்ளேயே பெரும் புயலாக உருவெடுத்திருக்கிறது.

இப்புயல் இப்போதைக்கு ஓயப் போவதில்லை. வேட்பாளர் ஒருவரை அறிவிக்கும் வரை புயல் தீவிரமடையும்; பெயரை அறிவித்த பின்னர் அது பெரும் சூறாவளியாக மோசமடையும்; உட்கட்சிப் பூசல்கள், குத்துவெட்டுகள், பிளவுகள், சரிவுகள் போன்றவற்றையெல்லாம் மஹிந்த அணி சந்திக்கப் போவதற்கான ஆரம்பம் இப்போதே தொடங்கி விட்டது.

பொதுவாக நோக்குகையில், எதிர்வரும் 2020 ஜனாதிபதித் தேர்தலானது மும்முனைப் போட்டி மிக்கதாக அமையுமென்றுதான் முன்னர் கருதப்பட்டது. ஆனால் கூட்டு எதிரணிக்குள் இவ்விடயத்தில் தற்போது உருவாகியிருக்கின்ற முரண்பாடுகளை உற்றுநோக்குகின்ற போது அத்தேர்தலானது நான்குமுனைப் போட்டியுள்ளதாக அமையுமென்றே தோன்றுகிறது.

இன்றைய நல்லாட்சியின் இரு பெரும் தோழமைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதில் சமீப காலமாக நிலவி வந்த பரபரப்பான ஊகங்களையெல்லாம் புறந்தள்ளிவிடும்படியாக மஹிந்த அணிக்குள் உள்வீட்டு யுத்தம் இப்போது அரங்கேறியிருக்கின்றது.

மஹிந்த அணிக்குள் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கப் போவது யார்?

இதுவே இன்றைய பரபரப்பு மிகுந்த வினா!

தற்போது ராஜபக்ஷ முகாமுக்குள் தீவிரமடைந்திருக்கின்ற கருத்து மோதல்களைப் பார்க்கின்ற போது, ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யாராக இருக்குமென்பதை ஊகிக்கவே முடியாதிருக்கிறது. உச்சகட்ட உள்வீட்டு யுத்தத்துக்கு மத்தியில்தான் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமென்பது மட்டும் நிஜம்!

அதன் பின்னர் அரங்கேறப் போவது பரபரப்புக் காட்சிகளின் இரண்டாம் பாகமாக இருக்கலாமென்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக தற்போது கூட்டு எதிரணிக்குள் தோன்றியிருக்கின்ற முரண்பாடுகளை இருவேறு விதமாக பிரித்து ஆராய்வதே பொருத்தம்.

முதலாவது ராஜபக்ஷ குடும்பத்தினுள் உருவாகியிருக்கின்ற முரண்பாடுகள்... இரண்டாவது, ஒட்டுமொத்த கூட்டு எதிரணிக்குள்ளும் தற்போது வெடித்திருக்கின்ற பூகம்பம்!

ராஜபக்ஷ குடும்ப முரண்பாடு என்ற ரீதியில் நோக்குகின்ற போது ‘ஜனாதிபதி வேட்பாளர்’ என்ற சர்ச்சையின் கீழ் பசில், கோத்தாபய, சமல், நாமல் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களாக விளங்குகின்றனர்.

ஆனாலும் பசில், கோத்தாபய ஆகிய இருவருமே அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களென்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவ்விருவருமே ஜானதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. சட்டம் அதனை அனுமதிக்கப் போவதில்லை. அதேசமயம் அமெரிக்கக் குடியுரிமையை எவருமே நினைத்த மாத்திரத்தில் விலக்கிக் கொள்ள முடியாதென அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள வட்டாரங்கள் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தமை நினைவிருக்கலாம்.

இது ஒருபுறமிருக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லையை தாம் இன்னுமே அடைந்து விடவில்லையென மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஷ சமீபத்தில் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இப்பட்டியலில் எஞ்சியிருப்பவர் சமல் ராஜபக்ஷ மாத்திரமேயாவார்.

அரசியல் பின்புலம் உள்ளவர் சமல் ராஜபக்ஷ... தந்தை வழியில் பார்க்கையில் அரசியல் குடும்பமொன்றிலிருந்து வந்தவர் அவர்.

ஆனாலும் தீவிர அரசியல் போக்கு கொண்டவரல்லர் அவர்! ‘ராஜபக்‌ஷ குடும்பம்’ என்பது மாத்திரமே அவர் கொண்டுள்ள விசேட தகுதி எனலாம்.

‘மென்மையான சுபாவம் கொண்டவர்’ என்று எதிரணி வட்டாரங்களாலேயே கூறப்படுபவர் சமல்.

நிலைமை இவ்வாறிருக்கையில் பசில், கோத்தாபய, நாமல் ஆகிய மூவருக்குமிடையில் தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை தனது அடுத்த வாரிசாக சகோதரர்களைப் புறந்தள்ளி விட்டு புதல்வரைக் கொண்டு வருவதே திட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் மஹிந்த தனது புதுடில்லி விஜயத்தின் போது புதல்வர் நாமல் ராஜபக்‌ஷவை தன்னுடன் அழைத்துச் சென்றமை இதுபற்றிய ஊகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்து விட்டது.

‘தனது அரசியல் வாரிசாக நாமலை அடையாளப்படுத்த மஹிந்த முற்படுகிறார்’ என்று கூட்டு எதிரணிக்குள் உள்ள முக்கியஸ்தர்கள் பலர் வெறுப்புடன் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

இது ஒருபுறமிருக்க, தனது புதல்வருக்கான வாய்ப்பு வரும்வரை சகோதரர்களுள் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் திட்டத்தை மஹிந்த கொண்டிருப்பதாக கூட்டு எதிரணிக்குள் உள்ளோர் கூறுகின்றனர்.

இதன் காரணமாக “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எனது சகோதரர் ஒருவர் களமிறங்குவார்” என்ற முக்கிய அறிவிப்பை இந்தியாவில் வைத்து மஹிந்த வெளியிட்டதாக கூட்டு எதிரணிக்குள் உள்ளோர் கூறுகின்றனர்.

மஹிந்த இந்தியாவில் வெளியிட்ட கருத்தை வைத்துப் பார்க்கின்ற போது, நாமலுக்கான தருணம் வரும்வரை தனது வாரிசுக்கான தற்காலிக வெற்றிடத்தை நிரப்புவதென்ற நோக்கத்துக்காக மாத்திரமே சகோதரர் ஒருவர் நிறுத்தப்படப் போவதாகத் தெரிகிறது.

மஹிந்தவின் கருத்தையும், நாட்டின் அரசியலமைப்பு விதிமுறைகளையும் வைத்து நோக்குகின்ற போது, சமல் ராஜபக்‌ஷவை மட்டுமே ஊகிக்க முடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் வாரிசாக எவரொருவர் நிறுத்தப்படுகின்ற போதிலும், ராஜபக்‌ஷ குடும்பத்தினுள் போட்டா போட்டி தீவிரமடைவதற்கான சூழலே அங்கு தென்படுகின்றது.

இவையெல்லாம் ராஜபக்ஷ குடும்பத்தினுள் உருவெடுத்துள்ள முரண்பாடுகளாகும்.

இது இவ்வாறிருக்கையில், அக்குடும்பத்தினுள் எவரொருவர் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் கூட்டு எதிரணிக்குள் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலும் முரண்பாடு உருவெடுக்கவே போகின்றது.

கூட்டு எதிரணிக்குள் மிகச் சிலர் மாத்திரமே ராஜபக்‌ஷ குடும்பத்தில் ஒருவரை வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென விரும்புகின்றனர். எஞ்சியோரெல்லாம் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு அப்பாலுள்ள ஒருவரையே வேட்பாளராக விரும்புகின்றனர்.

அதுவே உள்வீட்டு யுத்தத்தின் இரண்டாவது பாகமாக அமையப் போகின்றது!


Add new comment

Or log in with...