டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம் | தினகரன்

டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்

 

வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சு

வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்றிருந்த நிலையில் அன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்றும் நேற்று முன்தினமும் இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்புக்களாலும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண அமைச்சுப் பதவியில் டெனிஸ்வரனை மீண்டும் உள்வாங்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் நேற்றைய தினம் வடக்கு மாகாண அவைத்தலைவரால் தொலைபேசி மூலம் பா. டெனிஸ்வரனுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் இந்த முடிவுக்கு வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் தனது சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, டெனிஸ்வரனைப் பதவியிலிருந்து நீக்கியது செல்லாதெனவும், அவரைத் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தாத நிலையில் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனுவொன்றை டெனிஸ்வரன் தரப்புச் சட்டவாளர் தாக்கல் செய்திருந்தார்.

எதிர்வரும் 18ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய எதிர்மனுதாரர்களான அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விவகாரத்தில் சுமுகமானதொரு நிலை எட்டப்படுமாயின், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையைச் செயற்படுத்துவாராயின் வழக்குகளை மீளப் பெற்றுக் கொள்ளத் தயாராகவுள்ளதாக பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(செல்வநாயகம் ரவிசாந்)

 


Add new comment

Or log in with...