ஹங்கேரி மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய பாராளுமன்றில் வாக்கு | தினகரன்

ஹங்கேரி மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய பாராளுமன்றில் வாக்கு

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெறுமானங்களை மீறிய குற்றச்சாட்டில் ஹங்கேரி மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்கு பதிவாகியுள்ளது.

ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பானின் அரசு ஊடகங்கள், சிறுபான்மையினர் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டதோடு, அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இந்த கண்டன தீர்மானத்திற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கு அதிகமானவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் கீழ் இவ்வாறான வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றது இது முதல் முறையாகும்.

இதற்கு அரச தலைவர்களின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஹங்கேரி தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

ஹங்கேரி மீதான தடை மற்றும் வாக்குரிமை இடைநிறுத்தப்படுவது போலந்தின் வீட்டோவுக்கு உள்ளாகும் நிலை இருப்பதால் அவ்வாறான நடவடிக்கைகள் சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஹங்கேரியில் ஓர்பானின் அரசு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் குடியேற்றவாசிகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தஞ்சம்கோரிகளுக்கு உதவும் செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தும் சட்டம் ஒன்று அங்கு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் உரை நிகழ்த்திய பிரதமர் ஓர்பான், தனது அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியதோடு இது ஹங்கேரியை இழிவுபடுத்தும் மற்றும் மிரட்டும் நடவடிக்கை என்றார்.

2010ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஓர்பான், ஐரோப்பாவுக்கு வரும் குடியேற்றவாசிகளை ஏற்க மறுத்தது மட்டுமன்றி, நீதிமன்றம், ஊடகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அழுத்தங்கள் கொடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.


Add new comment

Or log in with...