நாட்டையும் மக்களையும் நேசித்த எளிமை மிகுந்த தலைவர் டட்லி | தினகரன்

நாட்டையும் மக்களையும் நேசித்த எளிமை மிகுந்த தலைவர் டட்லி

இலங்கையின் முன்னாள் பிரதமரான டட்லி சேனநாயக்க ஜனநாயக நடைமுறைகள், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் கொண்டவர். பொருளாதார மறுமலர்ச்சிக்காக உள்நாட்டு விவசாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை. அவரது தந்தை டி.எஸ்.சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட விவசாய குடியேற்ற முறைமை அவர் மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொண்ட மற்றொரு பணியாகும்.

அவரது அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களுக்கு மேற்பட்டது. 1936 இல் அப்போதைய தேசிய அரசுப் பேரவையில் உறுப்பினராக பெற்ற அனுபவத்தையடுத்த அவர் விவசாய அமைச்சரானார். 1950 இன் முற்பகுதியில் அவர் தனது பிரபல்யம் பெற்ற தந்தையைப் பின்பற்றி பிரதமராகவும் அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். ஆனால் இந்த அரசியல் பயணம் கஷ்டமானதாகவும் சந்தோஷமற்றதாகவும் இருந்தது.

அவர் மக்களையும் நாட்டையும் நேசித்தார். மக்களும் அவரை நேசித்தனர். ஆனால் பலம்மிக்க ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களுடன் செயற்படுவது அவருக்கு ஒரு போராட்டமாக இருந்தது, கவலைக்குரியதாக இருந்தது. வாழ்க்கையில் உயர்வதற்கு அவர் உதவி செய்த சிலர் ஒரு சமயம் அவருக்கு எதிராகவே சட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவமும் உண்டு.

டட்லியின் தந்தை டி.எஸ். சேனநாயக்க குறைந்த புத்தகக் கல்வியை கற்ற போதும் ஆச்சரியத்தக்க அறிவுத்திறன் கொண்டவர். ஆனால், அவரது மூத்த மகனான டட்லி கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் படித்தவர். போற்றத்தக்க ஆளுமை மிகுந்தவர். ஷெல்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர் நண்பர்களால் ‘ஷெல்லி’ என்று அழைக்கப்பட்டார். திருமணத்தைப் பற்றி ‘ஷெல்லி’ அக்கறை காட்டவேயில்லை. பிரமச்சரியம் அவருக்குப் பிடித்திருந்தது.

சப்பிட்டிகம கோறளையில் இருந்த போதலே வளவ்வயைச் சேர்ந்த சேனநாயக்க குடும்பத்தினர் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் அரசியலில் சிறந்திருந்தனர். அவர்களின் சகோதரர்களான எப்.ஆர். சேனநாயக்க மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோர் சுதந்திர போராட்டத்தில் முன்னணி வகித்தனர். 1915 இல் இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக, அப்போதைய கவர்னர் சார்மர்ஸின் உத்தரவின் பேரில் 30 வயதாக இருந்த டி.எஸ். சேனநாயக்க நீதி நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரது சகோதரர்கள் எப்.ஆர். மற்றும் டி.சியுடன் மதுஎதிர்ப்புப் போராட்ட அமைப்பின் தலைவர்கள் பலரும் கைதாகினர்.

கலவரங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வெலிக்கடை சிறையில் வைத்து அவர்களுக்கு அசுத்தமான கோப்பைகளில் உணவு கதவுக்கு அடியினால் உள்ளே தள்ளப்பட்டது.

டட்லியின் பாட்டனாரான டொன் ஸ்பேடர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர். காரீய சுரங்கத் தொழில் மற்றும் தோட்டப் பயிர்ச்செய்கை ஆகியவற்றில் அவர் பெரும் இலாபமீட்டினார். மதுபானத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு அவர்கள் நிறைய செலவு செய்தனர். டட்லியின் பாட்டனார் ஆரம்பித்த மதுவுக்கு எதிரான இயக்கத்தில் அவரது மகன்மார் மூவரும் அவர்களது 20 வயதுகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தந்தையாரான மஹா முதலியார் சேர் சொலமன் டயஸ் கவர்னர் சார்மர்ஸின் உதவியாளராக இருந்தார். கலவரங்கள் நடந்த போது அவர்கள் ஹொரகொல்​ைலயில் இருந்தனர்.

லண்டனில் இருந்து பாரிஸ்டராக நாடு திரும்பிய டட்லி, உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார். அத்துடன் பிரபல சட்டத்தரணி எச்.பி. பெரேராவுடன் சட்டத்துறையில் ஈடுபட்டார். டட்லி அவரது தொழில்சார் வேலைகளில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணத்தை சேகரிப்பதில் அசிரத்தை காட்டியமை அவரது குருவிடம் இருந்து கண்டனத்தைப் பெற்றுத் தந்தது.

அச்சமயத்தில் டட்லி தனது தகப்பனாரைப் போல் அரசியலில் ஈடுபட வேண்டுமென சப்பிட்டிகம கோறளை மக்கள் நெருக்குதல் கொடுத்தனர். ஆனால் டட்லி ஒரு இலேசான வாழக்கையையே விரும்பினார். அரசியலில் ஈடுபடுமாறு வலியுறுத்துவதில் சப்பிட்டிகம கோறளை மக்களுடன் டட்லியின் உறவினர்களும் நண்பர்களும் கூடச் சேர்ந்து கொண்டனர். ஆனால் டட்லி அரசியலில் அக்கறை காட்டுவதாக இல்லை.

இந்த நிலையில் வயிற்றில் ஏற்பட்ட நோய் காரணமாக டட்லி அவரது சட்டத் துறையில் தொடர்ந்து ஈடுபட முடியாதிருந்தது. எனினும் அவரது தந்தை தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் அவரது தந்தையின் தேர்தல் தொகுதியான மினுவாங்கொடையை அடுத்திருந்த டெடிகம தொகுதியில் டட்லி 1936 இல் போட்டியிட்டார்.

டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இந்த தேர்தல் நடைபெற்ற போது டட்லிக்கு 24 வயது மட்டுமே ஆகியிருந்தது. தேர்தலில் 8299 மேலதிக வாக்குகளால் டட்லி வெற்றிபெற்றர். டட்லிக்கு 17,045 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.எச். கீர்த்திரட்னவுக்கு 8,746 வாக்குகளும் கிடைத்தன.

டட்லியின் தந்தை 1940 இல் இரண்டாவது உலக யுத்தத்தை ஆதரித்த போதும் டட்லியும் அவரது நண்பரான ஜே.ஆரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். எதிரிக்கு ஆதரவு தெரிவித்தால் எமக்கு உடனடியாக சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர்கள் நினைத்தனர். இருவரும் கொழும்பில் இருந்த ஜப்பானிய தூதரகத்துக்குச் சென்று ஜப்பானுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்த இரு இளம் அமைச்சர்களின் மேற்படி செயற்பாட்டையிட்டு டட்லியின் தந்தை மிகுந்த கோபம் கொண்டார். இருவரையும் மோசமாகக் கடிந்து கொண்டார். இது அவர்களுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

டட்லியின் தந்தையுடன் கவர்னர் கெல்கொட் சிறந்த உறவுகளை வைத்திருந்த காரணத்தால் டட்லியும் ஜே.ஆரும் பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்வதில் இருந்து தப்பினர். இந்த சம்பவத்தை தவிர டட்லியின் தந்தை அவரது அரசியல் செயற்பாடுகளில் எவ்வித இடையூறும் செய்யவில்லை.

பிரிட்டிஷ் மகாராணியின் முடிசூட்டு விழாவில் இலங்கையின் நாட்டுத் தலைவர் என்ற ரீதியில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் டட்லிக்கு அழைப்பு விடுத்திருந்தது. நாடுகளின் தலைவர்களுக்கென அமர்த்தப்பட்டிருந்த குதிரை வண்டிகள் போதாமல் இருந்ததன் காரணமாக புதிதாக உருவான ஆபிரிக்க – பிரிட்டிஷ் காலனித்துவ நாடொன்றின் பெண் இராஜதந்திரி ஒருவருடன் குதிரை வண்டியை பகிர்ந்து கொள்ளுமாறு ஏற்பட்டாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு டட்லி எதிர்ப்புத் தெரிவித்தார்.

அத்துடன் அதற்கு மறுப்புத் தெரிவித்து அடுத்த விமானத்தில் இலங்கைக்கு திரும்பப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார்.

‘உங்கள் யோசனை எனது நாட்டுக்கு ஒரு இழுக்கு’ என்று டட்லி கூறியதையடுத்து பிரிட்டிஷ் அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் டட்லிக்கு விசேட குதிரை வண்டியொன்றை ஏற்பாடு செய்தனர்.

1970 இல் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து டட்லி ஒதுங்கிக் கொண்டு ஜே.ஆரை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள வைத்தார். சபையில் இருந்த ஐ.தே.க உறுப்பினர்களின் தலைமைத்துவத்தையும் ஜே.ஆரே ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. எனினும் ஐ.தே.கவின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் டட்லி மீண்டும் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று நெருக்குதல் கொடுத்தனர்.

கட்சிக்குள் ஏற்பட்ட இந்த சீர்திருத்தப் போராட்டம் ஜே.ஆருக்கும் டட்லிக்கும் இடையே இருந்து வந்த உறவுநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் கட்சியின் செயற்குழுவில் டட்லிக்கே பெரும்பான்மை கிடைத்தது. இதனையடுத்து ஜே.ஆர். பொதுக் கூட்டங்களைத் தவிர்த்தார். ஆனால் டட்லி தீவிரமாக செயற்பட்டதால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எம்.டி. பண்டா கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் ஜே.ஆரை கட்சியில் இருந்து நீக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.

ஜே.ஆர். டட்லியை நீதிமன்றத்துக்கு இழுத்தார். ஏ.சி.எஸ். ஹமீத் மட்டுமே ஜே.ஆருக்கு ஆதரவு வழங்கினார். மற்றைய ஆதரவாளரான வி.ஏ. சுகததாஸ அச்சமயம் நோயுற்றிருந்தார். டட்லியின் கீழ் கட்சி இயங்குவதை முறியடிக்க ஜே.ஆர் பல முயற்சிகள் செய்த போதும் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் ஜே.ஆர். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

எனினும் பாரிஸ் பெரேரா போன்ற மிதவாத தலைவர்களின் இடையீடு காரணமாக இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு ஜே.ஆரும் டட்லியும் சமரசம் செய்து கொண்டனர்.


Add new comment

Or log in with...