மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை | தினகரன்

மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் 27 ஆண்டுகளாக இருக்கும் 7 பேரையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி இருந்தது.

அதன்படி, தமிழக அமைச்சரவை கூடி, 'பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் எடுத்தது. இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இந்நிலையில், அந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று சில அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 7 பேரின் விடுதலைக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமே 'மாநில அரசு விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம்' என்று சொன்ன பிறகு, சில மூத்த அதிகாரிகளுக்கு மூக்கைத் துளைப்பதற்கு வேலையே கிடையாது. தமிழக அரசின் அமைச்சரவைதத் தீர்மானத்தை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் அவரது கடமை. அவ்வாறில்லாமல் இதில் குறுக்குவேலை செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான கண்டனத்துக்கு உரியவர்களாவர். ராஜீவ் படுகொலை என்பது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ரணமான செயல்தான். ஆனால், அந்த வழக்கின் புலன் விசாரணை, விசாரணையே சரியாகச் செய்யப்படாமல் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விட்டார்களோ என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே இந்த மண்ணின் சட்டமாகவும் கருத வேண்டும். அந்த அடிப்படையில் தமிழக அரசு, இந்த எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதில், ஏன் இந்த மூத்த அதிகாரிகள் தலையிடுகின்றனர்? இந்தியா என்ன ஜனநாயக நாடா அல்லது குறிப்பிட்ட சிலரின் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கும் வரம்பற்ற முடியாட்சி நாடா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது.

ஆலோசனையின் முடிவில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதுகுறித்து தற்போது ஆளுநர் முடிவெடுத்து இருக்கிறார். சரியாக ஒருவாரம் கழித்து ஆளுநர் இதில் நேற்றுமுன்தினம் மிக முக்கிய முடிவு எடுத்துள்ளார். பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதனால் இதில் விரைவாக முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...