Friday, March 29, 2024
Home » நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்

நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்

- பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பொன்றுக்குள் தொடர்ச்சியாக செயற்படுவது அவசியம்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 4:33 pm 0 comment

– நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம்
– 2023 இலங்கை பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் சகலரதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் ஊடாக வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (28) ஆரம்பமான 2023 இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:

இந்த நாட்டின் பொருளாதார மீட்சிக்காக கடந்த வருடத்தில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை பொருளாதார மறுசீரமைப்பு என்று கூற முடியுமா என தெரியவில்லை. மறுசீரமைப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை பார்த்தால் சில வாரங்களுக்கு முன்னர் பொருளாதாரத்திற்கு நாம் மேற்கொண்டது மறுசீரமைப்பு அல்ல. இது ஒரு முழுமையான மீளமைப்பு அல்லது ஒரு தீவிர மறுசீரமைப்பு என்று சொன்னால் தவறில்லை. எம்மால் திரும்பிச் செல்ல முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் வேலை செய்ய வேண்டும். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த ஆழமான பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளில் நாம் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்தது.

கடந்த சில மாதங்களில், எமது நாட்டிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணம் காரணமாகவே இந்தச் செயற்பாட்டில் வெற்றிபெற முடிந்தது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கு கொள்கையளவில் உடன்பாடு வழங்கிய முதலாவது வங்கி சீனா எக்ஸிம் வங்கியாகும். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மிக விரைவில் கொள்கையளவில் இதேபோன்ற உடன்பாட்டை வழங்கும் என்று நம்புகிறோம்.

மேலும், எதிர்வரும் டிசம்பரில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் மீளாய்வை சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாடாக நாம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்ளடங்கும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், கடன் வழங்குநர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுவார்கள். அதன்படி, இந்த ஒப்பந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

ஏனெனில் இந்த நீண்ட கால உடன்படிக்கையை இழந்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க முடியாது. எனவே, இந்த பொருளாதார கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். இது ஒரு கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் போட்டி நிறைந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் போது மேடைகளில் இருந்து தீர்வுகளைப் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள் இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் இதுவரை எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை. ஒரு நாடாக, நாம் என்றென்றும் வங்குரோத்து நிலையில் இருக்க முடியாது. எனவே, நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க்கும் வகையில் தற்போது செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் போட்டித்தன்மையுடன் செயற்பட விரும்பாததால் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது. இதுவே எங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

அதிலிருந்து நாம் பின்வாங்கினால் இன்னும் 10 வருடங்களில் இந்த நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதை தடுக்க முடியாது. அந்த நிலைக்கு திரும்புவதை நாம் யாரும் விரும்பவில்லை. எனவே நீங்கள் அனைவரும் மிகவும் போட்டித்தன்மையுடன் செயற்பட வேண்டும். எங்களிடம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன. எனவே போட்டித்தன்மைக்கு முகங்கொடுத்து முன்னேற வேண்டும்.

அதன் பின்னர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ வழிநடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவும் இணைந்துகொண்டார். இந்திய திட்டமிடல் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் மொன்டெக் சிங் அலுவாலியாவும் இந்தக் கலைந்துரையாடலில் இணைந்துகொண்டார்.

ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் வழங்கப்பட்ட பதில்களும் பின்வருமாறு:

கேள்வி : ஜனாதிபதி அவர்களே, வரி வருமானம் 18% வரையில் உயர்வடைந்தது. குறிப்பாக மதுவரி மற்றும் சுங்கத் திணைக்களம் உட்பட அனைத்து வரி சேகரிப்பு முறைகளையும் விரிவுபடுத்துவதற்கான திட்டமொன்று உள்ளதா?

பதில்: அது தொடர்பில் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். வருமான அதிகாரசபையொன்றை நிறுவவும் எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்த சில வாரங்களில் வரி தொடர்பான சட்டங்கள் பலவற்றை கொண்டு வரவும் எதிர்பார்க்கிறோம்.

ஒரே இரவில் அனைத்து செயன்முறைகளையும் உருவாக்குவது சாத்தியமற்றது. அதற்கு இரண்டு, மூன்று வருடங்கள் அவசியப்படும். இருப்பினும் நாம் தற்போதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

பிரித்தானியர் காலத்திலும் 1970 களின் ஆரம்ப பகுதியிலும் மாவட்ட வருமான அதிகாரியொருவர் இருந்தார். வருமானம் சேகரிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உதவுவதற்கான அரச அதிகாரியொருவரும் இருந்தார். அவர்களால் வருமானம் சேகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மாவட்டச் செயலாளர் நிதி சேகரிக்கும் வழிமுறை தொடர்பில் ஆராய்வதற்கு மாறாக நிதியை செலவிடும் முறைமை தொடர்பில் தேடியறிவதற்கான செயன்முறையொன்று நாட்டில் உருவாகியுள்ளது.

அதனால் வரி சேகரிப்புக்காக பிரதேச கட்டமைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அது ஒருங்கிணைப்பு அல்லது மாவட்ட வருமான அதிகாரி என்ற முறைமைக்கு நிகரானதாக அமையக்கூடும். இது கடினமான செயற்பாடாக அமைந்தாலும் அதனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

கேள்வி: சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்தல் மேற்பார்வைச் செயற்பாடுகளில் முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரச துறையின் நிர்வாகச் செயற்பாடுகளின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

பதில்: ஆங்கில மொழியிலிருக்கும் அந்த அறிக்கை தமிழ், சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்படுகிறது. திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டதை போல தொழில்நுட்ப சொற்கள் பல அறிக்கையில் உள்ளன. அவ்வாறான அறிக்கையை மொழிபெயர்ப்புச் செய்ய சிறிது காலம் அவசியப்படும். ஜனவரி மாதமளவில் அவற்றை பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகிறேன்.

அறிக்கையின் பரிந்துரைகள் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற மேற்பார்வை குழுவொன்று நியமிக்கப்படும். அதனை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும்.

பிரித்தானியர் காலத்தில் தயாரிக்கப்பட்ட கட்டமைப்புக்களையே நாம் இன்று வரையில் பயன்படுத்துகிறோம். அதனால் முழுமையான கட்டமைப்பினையும் மீளத் தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். அதனை நவீனமயப்படுத்த சிறிது காலம் அவசியப்படும்.

கேள்வி: தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் தற்போதைய நிலைமை எவ்வாறு உள்ளது?

பதில்: இது குறித்து சிங்கப்பூருடன் ஒரு இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம். மலேசியாவும் எம்மோடு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பிப்போம்.

வலயத்தின் நீண்ட பொருளாதார கூட்டமைப்பான RCEP இல் இணைந்துகொள்ள விண்ணப்பித்துள்ளோம். அதில் எம்மை இணைத்துக்கொள்ள தயார் என்றும் அதற்கான செயன்முறை ஒன்றை தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்தோடு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதற்கான செயன்முறையொன்று அவர்களிடத்தில் இல்லை என்றும் அறிவித்துள்ளமையினால் அந்தச் செயற்பாடுகளுக்கு சிறிது காலம் அவசியப்படும்.

இந்தியாவுடன் நாம் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம். இருப்பினும் இந்தியா முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கு மற்றுமொரு ஒப்பந்தம் அவசியப்படுவதாக அறிவித்துள்ளது. அது தொடர்பாக பேச்சுவார்தைகளை ஆரம்பித்துள்ளோம். அந்த பேச்சுவார்தைகள் நிறைவுற்ற பின்னர் பங்களாதேஷுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம். அதற்கு இணையாக RCEP உடனான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்படும்.

சீனா 7 வருடங்களாக எம்மோடு பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நாம் ஒப்பந்தத்தில் கைசாத்திட ஆரம்பித்துள்ளோம். இந்நிலையில் இன்னும் ஐந்து, ஆறு வருடங்களில் நாம் உலகத்திற்காக கதவுகளை திறப்போம். இருப்பினும் சீனா தொடர்பில் இன்னும் சில காலம் அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதேபோல் ஐரோப்பிய சங்கம், GSP+ மற்றும் அதனை தாண்டிச் செல்ல நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல் நாம் எதிர்காலத்தில் கிழக்கு, தென் ஆபிரிக்க நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், இலங்கை வணிகச் சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT