ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் 15 பேருக்கு எதிராக 2010-ம் ஆண்டு வழக்கில் மகாராஷ்டிர நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. கோதாவரி ஆற்றின் மீது கட்டப்படும் பாப்ளி அணை விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருமாநில எல்லையில் கோதாவரியின் குறுக்கே மகாராஷ்டிரா அரசு பாப்ளி அணை கட்டி வருகிறது. 2010-ம் ஆண்டு இந்த அணையைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவாளர்களுடன் அணையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உட்பட அவரது ஆதரவாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோர் மகாராஷ்டிர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தர்மாபாத் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் 2010-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிட்டுள்ள தர்மாபாத் நீதிமன்ற நீதிபதி என்.ஆர்.கஜ்பியே, சந்திரபாபு உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து செப்டம்பர் 21-ம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு குறித்துப் பதிலளித்த சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான லோகேஷ், "என்னுடைய தந்தையும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். தெலுங்கானா மக்களின் உரிமையைப் பாதுகாக்க அப்பா போராடினார். அதற்கு எதிராக அவர் கைது செய்யப்பட்ட போதிலும் பிணை பெற மறுத்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
Add new comment