இந்தியாவை பயன்படுத்தும் மஹிந்தவின் கனவு | தினகரன்

இந்தியாவை பயன்படுத்தும் மஹிந்தவின் கனவு

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவடட் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லியில் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவர் மறுபிறவி எடுத்துவந்துள்ளதைப் போன்றே காணப்படுகிறது.

2014 களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்ற தொனியில் அவர் கூறியுள்ளார். இதில் தொடர்புபட்ட ஒருவர் நல்லாட்சியில் முக்கிய அமைச்சராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நாட்டின் தலைவராக பத்து வருடங்களுக்கும் மேல் பதவி வகித்த ஒருவர் இப்படியும் கருத்து வெளியிட முடியுமா எனக் கேட்க வேண்டியுள்ளது. நாட்டு மக்களைவிட வெளி உலகையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

நாட்டின் தலைவராக மட்டுமின்றி பாதுகாப்புப் பிரிவின் சேனாதிபதியாக இருந்தவரால் நடவடிக்கை எடுக்க முடியாது போனது எவ்வாறு. இது வேண்டுமென்றே பின்பற்றப்பட்டதொரு செயற்பாடாகும் என்பதை யாவரும் அறிவர். அன்று பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த தனது சகோதரர் இனவாதச் சக்தியொன்றுடன் நேரடியாகத் தொடர்புபட்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணைபோனதை மூடி மறைக்கின்ற அவர் எதுவும் தெரியாதவர் போன்று கருத்து வெளியிடுவதை முட்டாள் தனமானதென்பதை விட மற்றொரு தடவை சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நாடகமாகவே நோக்க வேண்டியுள்ளது.

தனது சுயநல நோக்கத்துக்காக எப்படியும் நாடகமாடலாம் என்று முன்னாள் ஜனாதிபதி நினைக்கின்றார். சிறு பிள்ளைததனமான கூற்றுக்களை சர்வதேசம் நம்பும் என்று அவர் எடைபோட்டுள்ளார். மற்றொரு தேர்தலுக்கு இலக்கு வைத்து ஒன்றுமே நடக்கவில்லை என்ற தொனியில் அவர் பேச முற்பட்டிருப்பதை நன்கு நோக்கக்கூடியதாக உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்டபோது தனது தோல்வியின் பின்னாள் இந்தியாதான் தொடர்புபட்டிருந்ததாக அன்று குற்றச்சாட்டு சுமத்திய மஹிந்த ராஜபக்ஷ மூன்று வருடங்களில் அதனை முற்றாக மறந்துவிட்டு மீண்டும் இந்தியப் பிரதமர் மோடியின் காலடியில் தஞ்சமடைந்துள்ளார். அன்று தான் இந்தியாவைத் தவறாகப் புரிந்து கொண்டதாக வாய் கூசாது சொல்வதன் மூலம் அவரது குள்ளநரித்தனம் நன்றாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்குள் நாட்டைத் தள்ளிவிட்டுச் சென்ற ராஜபக்ஷ ஆட்சியிடமிருந்து 2015ல் நாடு மீட்கப்பட்ட போது பாரிய கடன் சுமையுடன் ஆட்சிப் பொறுப்பை இன்றைய நல்லாட்சி கையேற்றது. கடனிலிருந்து தேசத்தை மீட்பது கடினமானதென்பதை அறிந்த நிலையிலும் கஷ்டத்துக்கு மத்தியில் தூரநோக்குடன் அரசு செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சில பின்னடைவுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அந்தப் பின்னடைவின் நிலைமை வெளிப்பட்டமை உண்மைதான். இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டு மக்கள் இன்னமும் தம் பக்கமே இருப்பதாக ராஜபக்ஷ தம்பட்டமடிக்கத் தொடங்கியுள்ளார்.

படுகுழியில் தள்ளப்பட்டிருந்த நாட்டை மூன்றாண்டு காலத்துக்குள் ஓரளவு கரை சேர்த்திருக்கும் நிலையில் ஆட்சி அரசியல் திசைமாறும் நிலைமை உருவாகுமானால் அதன் பின் விளைவுகள் பாரதூரமானவையாகவே அமைந்துவிடலாம். எப்படியும் அடுத்த ஆண்டு முக்கிய தேர்தலொன்று நடக்க வாய்ப்பிருக்கும் நிலையில் அதனை இலக்கு வைத்து மக்களைத் தவறாக வழி நடத்த முற்படுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. தேர்தலை இலக்கு வைத்துப் போடப்படும் பிள்ளையார் சுழியாகவே மஹிந்தவின் இந்திய விஜயத்தை நோக்க வேண்டியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியதன் பின்னர் ‘இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விடயங்களை தொட்டுப் பேசியுள்ளார். தன்னுடைய நப்பாசைகள் பலவற்றைச் சொல்லியிருப்பதுடன், இந்தியாவுடனான நப்பாசை பற்றியும் சிலாகித்திருப்பது கவனிப்புக்குரியது.

இந்திய எதிர்ப்பு அரசியல் என்ற மாயையை, இலங்கை மக்களிடம் காட்டிவரும் மஹிந்த தரப்பினர், இந்தியாவில் பேட்டி கொடுக்கும் போது, ‘இந்தியா எங்களின் அயல்நாடு, சீனா எங்களின் நெடு நாள் நண்பன்’ எனத் தெரிவித்திருக்கிறார். அது மாத்திரமன்றி, அபிவிருத்தி என்ற ஒன்றைச் சிந்திக்கும் போது, முதலில் தாங்கள் அணுகுவது இந்தியாவைத்தான் என்பதையும் மஹிந்த கூறியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், தன்னுடைய அரசியல் எதிர்காலம் தொடர்பான நப்பாசைக்கு, இந்தியாவின் ஆதரவு முக்கியம் என்பதைப் பல முறை சொல்லியிருப்பது தெளிவாகிறது. தேர்தல் ஒன்றை நோக்கி இலங்கை, அரசியல்வாதிகள் நகரும்போது, புறவழுத்தங்கள் தொடர்பில் தவிர்க்க முடியாத சூழலே, இலங்கையில் இருந்து வருகிறது. அதில், இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாதது என்பதை மஹிந்த உணர்ந்திருக்கிறார். அதுமாத்திரமின்றி, இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் தவறான புரிந்துணர்வைத் தான் கொண்டிருந்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இத்தகைய நப்பாசையை வெளிப்படுத்தியிருப்பதனூடாக எதிர்கால அரசியல் தொடர்பான தன்னுடைய நப்பாசைக்கு இந்தியா உதவும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால் இந்திய வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம், பிறநாடொன்றின் உள்நாட்டு அரசியலில் நேரடித் தலையீட்டை இந்தியா விரும்பாது என்பதே யதார்த்தம். இருப்பினும், புறவழுத்தம் என்பது தவிர்க்க முடியாததொன்று என்பது நிதர்ஷனமானதாகும்.


Add new comment

Or log in with...