சிரிய இத்லிப் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி பெருமளவு ஆயுத விநியோகம் | தினகரன்

சிரிய இத்லிப் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி பெருமளவு ஆயுத விநியோகம்

சிரிய அரச படை மற்றும் அதன் ரஷ்ய கூட்டணி தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையில் வடமேற்கு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி அயுதங்களை விநியோகிக்க ஆரம்பித்திருப்பதாக கிளர்ச்சியாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருக்கும் இத்லிப்பில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த கடந்த வாரம் ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் துருக்கி நடத்திய சந்திப்பு தோல்வியில் முடிந்ததை அடுத்து துருக்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனது நாட்டு எல்லையை ஒட்டி இருக்கும் இத்லிப் மாகாணத்தில் இடம்பெறும் மோதல் மேலும் சிரிய அகதிகள் தனது நாட்டு எல்லையில் குவிவதற்கான வாய்ப்பு இருப்பதாக துருக்கி அஞ்சுகிறது. துருக்கியில் ஏற்கனவே 3.5 மில்லியன் சிரிய அகதிகள் அடைக்கலம் பெற்றுள்ளனர். துருக்கி முகம்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பாதுகாப்பு பிரச்சினை குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரிதுள்ளார். “நீண்ட யுத்தம் ஒன்றில் முழுமையான இராணுவ உதவிகளை வழங்க அவர்கள் (துருக்கி) உறுதி அளித்துள்ளனர்” என்று சிரிய கிளர்ச்சி தளபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அண்மைய தினங்களில் வெடிபொருட்கள் மற்றும் க்ராட் ரொக்கெட்டுகள் உட்பட பெரும் அளவான ஆயுதங்கள் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

“இந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் எமது யுத்தத்தை நீடிப்பதற்கு வழியை ஏற்படுத்துவதோடு யுத்தம் ஒன்றில் எமது ஆயுதங்கள் குறைவில்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது” என்று அந்த கிளர்ச்சி தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதலிப் மாகாணத்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் வசிப்பதோடு இவர்களில் பாதியளவானவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாவர்.

இந்த மாகாண எல்லையில் சிரிய இராணுவம் துருப்புகளை குவித்திருப்பதோடு அரச படை, ரஷ்யாவுடன் இணைந்து இங்கு உக்கிர வான் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது.


Add new comment

Or log in with...