சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி அறுகம்பை | தினகரன்

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி அறுகம்பை

இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம்வரை மக்களின் பொழுதுபோக்கு சொர்க்கபுரியாகவே இருந்து வருகின்றது. இங்கு இயற்கையாகவே கொண்டமைந்த துறைமுகங்கள், வனப் பிரதேசங்கள், வானைத் தொடும் மலை முகடுகள், அதிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கைகளுடன் பறவையினங்கள் போன்றவைகள் எல்லாம் அழகிற்கு அழகு சேர்ப்பனவாக உள்ளன. இதனால் தான் இலங்கை தீவு உல்லாசப் பயணிகளின் பயணப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதெனலாம்.

எமது நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் ஒரேயொரு முறையுடன் பயணத்தை நிறுத்திக் கொள்ளாது வருடா வருடம் தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு எமது நாட்டின் பூகோள அமைப்பே பிரதான காரணமாக அமைந்துள்ளது. அதாவது 12 மணி நேரத்தில் சூடு, குளிர் மிதமான காலநிலையினை அனுபவிக்கக் கூடிய ஒரே ஒரு நாடாக உள்ளதே மூலகாரணம் என கூற முடியும். காலையில் அம்பாறை அறுகம்பை கடற்கரையில் கடலலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு விட்டு மதியம் நுவரெலியாவில் ஓய்வு எடுக்கக் கூடிய சூழ்நிலை இருப்பது எமது நாட்டிற்கு அதிக மதிப்பெண்ணாக உள்ளதெனலாம்.

முன்னர் யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட புராதன இடங்களுக்கு மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் கரையோரப் பிரதேசங்களின் எழில்மிகு அழகிய காட்சிகளை கண்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதன் மூலமாக அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாயிற்று. இதனால் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு தோன்றியுள்ளது.

எமது நாட்டில் உல்லாசப் பயணிகளை அதிகம் கவர்ந்திருக்கின்ற இடங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டம் அறுகம்பை முக்கிய இடத்தில் உள்ளதெனலாம். இந்த அறுகம்பை ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பிருந்தே அந்நியர்களின் சிறிய மீன்பிடித்துறைமுகமாகவும் பொழுதுபோக்கு இடமாகவும் இருந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் கிழக்கின் கரையோரப் பிரதேச கடற்கரைகளை மையப்படுத்தி பல ஓய்வு மண்டபங்களை அமைத்தார்கள். இதில் பொத்துவில் நகருக்கு அண்மையிலுள்ள அறுகம்பையிலும் ஒரு பெரியளவான வாடிவீட்டினை அமைத்துள்ளார்கள்.

உலகிலுள்ள கடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த குடா பகுதிகளில் மிகவும் இயற்கையான குடாவாக அறுகம்பைக்குடா இருப்பதாக வெளிநாட்டு பயண கையேடுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடன் இணைந்ததாக சர்வதேச ரீதியில் கடலலைச் சறுக்கு விளையாட்டுக்கு மிக பொருத்தமான இடமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறுகம்பை பிரதேசம் மேற்குல உல்லாசப் பயணிகளின் வருகையினால் களைகட்டியுள்ளது. குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் வரை இப்பகுதி மிகுந்த சுறுசுறுப்பாகவே காணப்படும். சுற்றுலாப் பயணிகளுடன் தென்பகுதி, மீனவர்களின் வருகை இப்பகுதியில் மிகுதியாக காணப்படுவதால் பதப்படுத்தப்படாத புத்தம்புதிய கடலுணவுகளை சுவைப்பதில் வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளதை காணமுடியும்.

தற்போது இங்கு வருகை தந்துள்ள உல்லாசப் பயணிகளில் பெரும் பகுதியினர் தமது குழந்தைகளுடன் குடும்பமாக வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. மாலை வேளைகளில் அறுகம்பை குடா கடற்கரை நீர்ச் சறுக்கு விளையாட்டு, படகுச் சவாரி, கடற்குளியல், மீன்பிடி என களைகட்டியிருக்கும், உள்ளூர் பயணிகள் தமது வாகனங்களை நிறுத்துவதில் பாரிய இடநெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றார்ள்.

அறுகம்பைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இக்கடற்கரைப் பகுதியை மட்டும் அனுபவிப்பது கிடையாது. இதனை அண்மித்துள்ள குமண பறவைகள் சரணாலயத்திற்கும் சென்று வருகின்றார்கள். அறுகம்பையிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உகந்தை முருகன் ஆலயத்தின் பின்புறமாகவே குமண சரணாலய பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணிகள் சரணாலயத்திற்கு செல்வதற்கு முன் உகந்தை முருகனை தரிசித்து புகைப்படம் பிடித்து அவரது அருளைப் பெற்றுக் கொள்வதுடன், இப்பகுதியின் புராதன இடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் கற்சுனைகள், மலை மேல் உள்ள ஆலய பீடம், சிறு கற்குகைகள், கடலில் நீண்டுள்ள மலைப்பாறை (இதுவே முருகப் பெருமானின் தங்கத்தோணி) போன்றவற்றையும் ஆலய சூழலில் கூட்டம் கூட்டமாக வலம்வரும் மான் மயில் கூட்டங்கள், பட்சிகளின் ஓசைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ளார்கள்.

ஆர். நடராஜன்
(பனங்காடு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...