வடக்கு கிழக்கு விவசாய செயல்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு | தினகரன்


வடக்கு கிழக்கு விவசாய செயல்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

வடக்கு கிழக்கு விவசாய செயல்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு-Minister of Agriculture Angajan Discussed-North East Agri Projects

 

வடக்கு, கிழக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாய விளைச்சலை அதிகரிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு, இராஜகிரியவில் அமைந்திருக்கும் கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இது தொடர்பான தீர்மானமிக்க முடிவுகளை எடுப்பதற்காக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று (13) அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

கமத்தொழில் அமைச்சின் இயங்கும் சேவை நிலையங்களின் உயர் அதிகாரிகளின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

நான் அமைச்சை பொறுப்பேற்றதன் பின்பு மாவட்ட ரீதியாக கமநல சேவை திணைக்களங்கள், பிரதேச கமநல சேவை நிலையங்கள், மற்றும் மாவட்ட ரீதியாக இடம்பெற்ற விவசாய விசேட கூட்டங்களை கூடி ஆராய்ந்திருகின்றோம்.

உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களில் அவதானம் செலுத்தி தீர்மானங்களையும் விவசாய பெருமக்களின் பிரதிநிதிகளது ஒத்துழைப்போடு முடிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

கூட்டங்களின் போது விவசாயிகளினது பல்வேறு குறை நிறைகளை இனங்கண்டிருக்கின்றோம். விவசாய பகுதிகளுக்கும் நேரடி களவிஜயம் செய்து, அவதானித்து, கருத்துக்களையும் கேட்டறிந்திருந்தோம்.

காலபோக செய்கை ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஆளணி வளம் அதிகரிக்க, விவசாய துறை சார்ந்தவர்களை உள்ளீர்க்க வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது வினைத்திறனான சேவைகளை முன்னெடுக்கும் சூழ்நிலையிலேயே, விளைதிறனான செய்கைகளை அறுவடைகளாக பெற்றுக்கொள்ள முடியும்.

விவசாய கிராமங்களை உருவாக்க உள்ளோம்
ஆயிரம் குளங்கள்,ஆயிரம் கிராமங்கள் செயற்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டு பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பழச்செய்கையை பாதுகாத்து ஊக்குவிக்க, பதப்படுத்தல் நிலையங்களை நிறுவுவதன் மூலம் உள்நாட்டு உற்பத்திகளை மக்களுக்கு வழங்குவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்பும், பல செய்கையாளர்களும் பாதுகாக்கப்படுவர்.

கீரை வகைகள், மூலிகைச் செய்கைகளை மேற்கொள்ள, விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவசாய கழகங்களை நிறுவி, விவசாயத்தை ஊக்குவிக்க யோசனை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

எனவே இதுவரை காலமும் விவசாயிகளோடு ஒன்றித்து தமது சேவைகளை முன்னெடுத்த அதிகாரிகளினது அனுபவ ரீதியிலான கருத்தாடலானது, மாற்றத்திற்கு வித்திடும் எனவும் தெரிவித்தார்.

மிக முக்கியமானதாக நெல் கொள்வனவை அதிகரித்திருந்தோம். ஏனைய மாவட்டங்களில் கடைப்பிடிப்பதை போன்று கிலோ அடிப்படையில் விலை கொள்வனவு இடம்பெறுவதோடு, ஒரு மூடை 66 கிலோவாக இருக்க கடந்தவாரம் இடம்பெற்றிருந்த கிளிநொச்சி விவசாய விசேட கூட்டத்தின் பொழுது விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து தீர்மானமாக நிறைவேற்றியிருக்கின்றோம்.

விவசாய விளைநிலப்பரப்புக்கள் மற்றும் தனியார் காணிகளில் அத்துமீறும் விலங்குகளை கட்டுப்படுத்த, அதி உச்ச சட்ட நடவடிக்கையுடன் தண்டனை வழங்க தீர்மானம் எட்டியுள்ளோம்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற உலக வங்கியின் செயற்திட்டத்தின் போது ஏற்றுமதியாளர்களுக்கும் செய்கையாளர்களுக்குமான சிறந்த தொடர்பாடலை ஏற்ப்படுத்தியிருந்தோம்.

விவசாய மக்களுக்கு நவீன கொள்கை திட்டங்கள் மற்றும் நவீன உபகரண பாவனை குறித்து கண்காட்சிகளுடன் விளக்கமளிக்கப்பட்டது.

அவற்றை கமநல சேவை நிலையங்களில் மேலும் விஸ்தரிப்பதோடு கமநல சேவை நிலையங்களில் ஊடகப்படுத்துதல் மூலமாக விழிப்புணர்வை ஏற்ப்படுத்த அறிவுறுத்தியிருக்கின்றோம்.

எனவே மக்களின் குறைகேள்களை நிவர்த்தி செய்யும் முகமாக எமது அதிகாரிகள்  செயல் திட்டங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய மூலோபாயங்கள் குறித்து ஆராயந்திருக்கின்றோம்.என  பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

(வி. தயாளன்)

 


Add new comment

Or log in with...