கிளிநொச்சியில் 38 வீத நிலப்பரப்பு இராணுவ வசம்: அபிவிருத்திக்கு தடை | தினகரன்

கிளிநொச்சியில் 38 வீத நிலப்பரப்பு இராணுவ வசம்: அபிவிருத்திக்கு தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 38 வீதமான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமுள்ளதால் நகர அபிவிருத்திக்கு பெரும் தடையாகவுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகள் இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில்உள்ளன.

இது நகர அபிவிருத்திக்கும் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் தடையாக உள்ளது.

இக்காணிகளிலுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் நகரப்பகுதியில் உள்ள 38 வீதமான நிரப்பரப்பு இன்னமும் இராணுவத்தினர் வசமுள்ளது.

இதனால் கிளிநொச்சி நகரத்தை ஒரு நகர வடிவமைப்புக்குள் கொண்டு வரமுடியாதுள்ளது.

காரணம் கிளிநொச்சி நூலகம் இருந்த பிரதேசம் பட்டினசபை இருந்த இடங்கள் எல்லாம் பெரிய இராணுவ முகாமாகவுள்ளன.

சுமார் 2,600 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் காணியும் இன்னமும் விடுவக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இதனை வலியுறுத்தியுள்ளோம்.

உருத்திரபுரம், கூழாவடிப்பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இராணுவ காவலரண்கள் உள்ளன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியில் தனியார் காணியில் சிறிய கொட்டகை அமைத்துள்ள இராணுவம் அதனை விட்டு வெளியேறுவதற்கு ஒன்பது இலட்சத்து 40 ஆயிரம் ரூபா ​தேவை எனக் கோருகின்றது.

இந்தக் காணியின் பெறுமதியைவிட, இவர்கள் கேட்கும் தொகை அதிகமாகும்.

பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ள இராணுவம் அதிலிருந்து வெளியேறுவதற்கு நிதிகேட்கின்றது.

இந்த மக்கள் கிளிநொச்சியில் தங்களின் இடங்களில் நிம்மதியாக சுதந்திரத்துடன் வாழுகின்ற சூழல் இன்னமும் உருவாக்கப் படவில்லை.

நகரை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட இடங்கள் தடையாகவுள்ளன.

யாழ்ப்பாணத்துக்கு ஒரு நகரம் உள்ளது. முல்லைத்தீவுக்கு நகரம் இருக்கின்றது. வவுனியாவிற்கு நகரம் உள்ளது.

அதேபோன்று கிளிநொச்சிக்கு ஒரு நகரம் அமையவேண்டும் என்பது எமது மக்களின் நீண்டநாள் கனவு. எனவே கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 பரந்தன் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...