Friday, March 29, 2024
Home » T20 கிரிக்கெட் தொடர்: சதம் விளாசி அசத்தினார் மெக்ஸ்வெல்

T20 கிரிக்கெட் தொடர்: சதம் விளாசி அசத்தினார் மெக்ஸ்வெல்

- 3ஆவது போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி; தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை

by Prashahini
November 29, 2023 2:05 pm 0 comment

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியாஅணிகளுக்கு இடையிலான 3வது T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று (28) அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற்றது. அதில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 6 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 52 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அடித்து விளையாடிய ருதுராஜ் 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திலக் வர்மா 24 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 222 ரன் எடுத்தது.

இதையடுத்து, 223 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹார்டி களமிறங்கினர். ஹார்டி 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து, டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த இங்க்லிஸ் 10 ஓட்டங்களும் ,மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ஓட்டங்களும் ,டிம் டேவிட் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார்கள்.

ஆனால், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மெக்ஸ்வெல் 47 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கடைசி ஒவரில் வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியில் இறங்கிய மெக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் மெக்ஸ்வெல் 104 (48) ஓட்டங்களும் ,மேத்யூ வேட் 28 (16) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

அவுஸ்திரேலியா அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT