நாமலுக்கு வாய்ப்பு வரும் வரை மஹிந்த தந்திரமாக காய்நகர்த்தல் | தினகரன்

நாமலுக்கு வாய்ப்பு வரும் வரை மஹிந்த தந்திரமாக காய்நகர்த்தல்

தினேஷ், வாசுவுக்கு சந்தர்ப்பங்கள் மறுப்பு

தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருக்கும்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு கிட்டும் வரை மஹிந்த ராஜபஷ, பல்வேறு தந்திரோபாயங்களை முன்னெடுத்து வருவதாக ஐ.தே.க.எம்.பி. ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று (13) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரை சிம்மாசனத்தில் அமர்த்திப் பார்ப்பதே ஒன்றிணைந்த எதிரணியினரதும் மொட்டுக் கட்சியினதும் குறிக்கோளென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ராஜபக்ஷ குழுவினரும் மொட்டுக் கட்சியூடாக தமது அபிலாஷைகளை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எதிரணியினர் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் ஆதரவு கிடைக்காததால், சர்ச்சைக்குரிய பால் பக்கற்றுக்களை அவரது குழுவினர் விநியோகித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ராஜகருணா எம்.பி, அது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிஸாரைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது சந்தேகம் எழுந்திருப்பதாக இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் துக்ஷார இந்துனில் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மஹிந்தவின் 'எந்த சகோதரர்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Add new comment

Or log in with...