சர்வதேச நியமங்களை மீறி அமைந்தால் கடும் போராட்டம் | தினகரன்

சர்வதேச நியமங்களை மீறி அமைந்தால் கடும் போராட்டம்

உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் (திருத்தம்) சர்வதேச மனித உரிமை நியமங்களை மீறும் வகையில் அமையுமானால் அதற்கெதிராக கடுமையான போராட்டங்களை நடத்துவதற்கு தயங்க மாட்டோமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய சட்டம், சர்வதேச மனித உரிமை நியமங்களை மீறும் வகையில் அமையுமானால் அதனை அமுல்படுத்த வேண்டாமெனக் கோரிக் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தயங்கப் போவதில்லை எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை தொடர்பில் நேற்றைய தினம்(13) வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் 1979 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தால் தமிழ் மக்கள் மிகக் கொடிய பாதிப்புக்களை எதிர்கொண்டனர். நாட்டிலுள்ள தமிழர்களின் முழுமையான சுதந்திரங்களும் இந்தச் சட்டத்தால் பறிபோயுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை வேறொரு பெயரில் கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

செல்வநாயகம் ரவிசாந்

 


Add new comment

Or log in with...