ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் | தினகரன்

ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (13) விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

நண்பகல் ஆரம்பமான இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் பிரதானிக்கு எதிரான விசாரணை குறித்த விடயம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர். எனினும், தான் வெளிநாடு செல்வதால் விசாரணைக்கு வரமுடியாதென அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய (13) தினம் அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டிய ஜனாதிபதி, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரியவருகிறது.

முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் தனக்கு பல விடயங்கள் அறிவிக்கப்படுவதில்லை என்றும், முக்கியமான முடிவுகள் பற்றி எவரும் தெரிவிப்பதில்லையென்றை அதிருப்தியையும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகத் தெரியவருகிறது.

அது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பின் பிரதானிகள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதி இந்த விசேட அமைச்சரவையில் கூறியிருப்பதாகத் தெரிய வருகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் நேற்றைய தினம் அவசர அவசரமாக விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...