வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது நல்லாட்சியே | தினகரன்

வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது நல்லாட்சியே

வழங்கப்பட்ட ஊடக சுதந்திரம் அரசுக்கெதிராகவே பிரயோகம்

நாட்டின் அரசியல் வரலாற்றில் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே. எனினும் அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் எதுவும் மக்களுக்கு தெரியாமலுள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கவலை தெரிவித்தார்.

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ள போதும் பெரும்பாலான ஊடகங்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதையே தமது முழுநேர வேலையாக செய்துவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினமின பத்திரிகையின் இணை இதழாக வெளிவரும் ‘சுவ அரண’வின் ஓராண்டு நிறைவையொட்டிய நிகழ்வு நேற்றைய தினம் லேக்ஹவுஸ் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிருஷாந்த குரேயால் ‘சுவ அரண’ இதழ் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு இந்நிகழ்வில் கையளிக்கப்பட்டது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர், பொது முகாமையாளர் அபே அமரதாஸ, ‘சுவ அரண’ இதழின் பொறுப்பாசிரியர் புத்திகா இம்புலான உட்பட நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பி.ஜி.எஸ். குணதிலக்க உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன,

நான் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்தபோது இதுபோன்றதொரு இதழை ஆரம்பித்தேன்.

அதற்கு பெரும் வரவேற்பிருந்தது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. அதன்போது வானொலி சேவையொன்றையும் நான் ஆரம்பித்தேன். இரவில் கடலுக்குப் போகும் மீனவர்கள் மற்றும் மத்திய கிழக்கில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் பிரயோசனமாக அமைந்தது.

அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய அரசாங்கம் என்ற பெருமை இந்த அரசாங்கத்துக்கே உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் வேறு எந்த அரசாங்கமும் இவ்வாறு செயற்படவில்லை. எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் செயற்பாடு மிக மந்தமாகவே உள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியது. அதன்போது அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுப்பதில்லை என தீர்மானித்திருந்தோம்.

சர்வதேச ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் தமது செயற்திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் பிரசாரங்களுக்கு முக்கியத்துவமளிக்கவில்லை.

இதனால் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிய முடியாமல் உள்ளது.

யதார்த்தத்தைப் பேசினால் தேசத்துரோகி என்ற நிலையே தற்போது நாட்டிலுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை பற்றிக் குறிப்பிடும் போது, கடந்த அரசு போல நாமும் செயற்பட்டிருந்தால் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதான சந்தியிலும் கட்அவுட்களையும் போஸ்டர்களையும் வைக்க வேண்டியிருக்கும். எனினும் நாம் வேலைத்திட்டங்கள் எதற்கும் பிரசாரங்களை முன்னெடுப்பதில்லை.

அதனால் தற்போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்க ஆரம்பித்துள்ளோம்.

சுகாதார அமைச்சை பொறுத்துவரை நாட்டிற்கு பாரிய சேவைகளை செய்து வருகின்றது. சுகாதாரத்துறைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் , இயந்திராதிகள், மருந்துகள் என அனைத்தும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

முன்னர் பல இலட்சம் ரூபாவை செலவிட்டே மக்கள் பெற்றுக்கொண்ட சிகிச்சைகள் தற்போது இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டியது அவசியம். அவ்வாறில்லாவிட்டால் அதற்கு பெறுமதியில்லாமல் போய்விடும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...