மக்கள் ஆணைக்கு விரோதமாக செயற்படும் மஹிந்த அணியினர்! | தினகரன்

மக்கள் ஆணைக்கு விரோதமாக செயற்படும் மஹிந்த அணியினர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான கூட்டு எதிரணி உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்தை பரப்பி வருகின்றது. இந்தப் பிரசாரம் கடந்த சில வாரங்களாக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2015 ஜனவரி 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், அதே வருடம் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மக்கள் தெளிவான ஆணையை வழங்கி இருக்கிறார்கள்.

அந்த ஆணையில் ஜனாதிபதித் தேர்தலையோ பொதுத் தேர்தலையோ உரிய காலத்திற்கு முன்னர் நடாத்த வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக, அந்த மக்கள் ஆணைகள் அந்த பதவிகளுக்குரிய காலம் நிறைவடையும் வரையிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயக அடிப்படையில் மக்கள் வழங்கியுள்ள இந்தஆணையை மதித்து நடக்க வேண்டியது ஒவ்வொருவரது பொறுப்பாகும்.

அதேநேரம், நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளது. அப்பலத்திற்கு கூட்டு எதிரணி எவ்விதத்திலும் சவாலாக இல்லை. கடந்த மூன்று வருட காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒவ்வொரு வாக்கெடுப்பிலும் நல்லாட்சி அரசாங்கம் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்து வருக்கின்றது. இதுதான் யதார்த்தம்.

நிலைமை இவ்வாறிருக்கையில், அந்த ஆணைக்கு மாறாக உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு கோருவது எவ்விதத்திலும் நியாயமற்றது. அது மக்கள் ஆணையை மதிக்காத கோரிக்கையும் ஆகும்.

உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலையோ பொதுத் தேர்தலையோ நடத்துமாறு நாட்டு மக்கள் கோரவும் இல்லை, அவ்வாறு தேர்தல் நடத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டதாகவும் இல்லை. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

நிவித்திகலையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, 'உரிய தினத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தயாரில்லை' என்று குறிப்பிட்டிருக்கின்றார். வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சர்வதேச ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,' உரிய காலத்திற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் கிடையாது' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இதுதான் பொறுப்பு மிக்க தலைவர்களின் பதிலும் அறிவிப்புமாகும். தேர்தல் ஒன்றை நடத்தும் போது அதற்கு ஏற்படும் செலவு மிக அதிகளவானது. அந்தச் செலவானது நாட்டின் பொதுநிதியைக் கொண்டுதான் மேற்கொள்ளப்படும். அதனால் நாட்டின் பொதுநிதியைப் பொறுப்புணர்வுடனும் ஒழுங்கு முறையாகவும் பயன்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பும் கடமையுமாகும். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டு எதிரணியினரின் கோரிக்கைக்கும் பிரசாரத்திற்கும் இவ்வாறு பதிலளித்து இருக்கின்றனர்.

ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் தேர்தல் என்பது கேலிக்குரிய ஒன்றாகவே நோக்கப்பட்டது. அதனால் ஆட்சியாளர் விரும்பிய நேரத்தில் உரிய காலத்திற்கு முன்னர் பல தேர்தல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு தேர்தல்கள் நடத்தப்பட்டதால் பொதுமக்களின் நிதி அதிகளவில் வீண்விரயம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பொதுநிதி வீண்விரயம் என்பது உச்சக்கட்டத்தில் காணப்பட்டது. இதனை சகலரும் அறிவர்.

ஆனால் பொதுநிதி என்பது பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்தக் கூடியதல்ல. இருந்தும் இவை தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. நாடு இன்று முகம்கொடுத்திருக்கும் பல்வேறு சவால்களுக்கும் கடந்த ஆட்சியாளர்கள் கையாண்ட பிழையான அணுகுமுறைகளே காரணமாக அமைந்திருக்கின்றன. அவ்வாறான அணுகுமுறையை இந்த நல்லாட்சி அரசாங்கமும் கையாள வேண்டும் என்றுதான் கூட்டு எதிரணியினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தினர் மக்கள் வழங்கியுள்ள ஆணையை உரிய முறையில் பேணி அதற்கேற்ப செயற்பட்டு வருகின்றனரேயொழிய கடந்த ஆட்சியாளர்களைப் போன்று பதவிக்கு வந்த பின்னர் மக்கள் ஆணையை உதாசீனம் செய்து செயற்படவில்லை. அதற்காக முயற்சிக்கவும் இல்லை.

இதன் விளைவாக நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் வளர்ந்து வியாபித்து வருகின்றன. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் ஜனாதிபதி ஆதரவிலான கூட்டு எதிரணியினர் உரிய காலத்திற்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். ஆனால் எப்போதும் பொறுப்புணர்வோடு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே மக்கள் ஆணையை மதித்து செயற்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதனால் கட்சி நலன்களுக்கு அப்பால் நாட்டின் மீது பற்றுடன் செயற்படுவது மிகவும் அவசியமானது. அந்த வகையில் நாட்டில் சுபீட்சத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய பணிகளுக்கு அற்ப அரசியல் நலன்களுக்குஅப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்களின் பொறுப்பாகும். இதை விடுத்து மக்கள் ஆணையை மதிக்காது உரிய காலத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தக் கோருவது எவ்விதத்திலும் நியாயமற்ற கோரிக்கையாகும்.


Add new comment

Or log in with...