Friday, March 29, 2024
Home » டெங்கு அச்சுறுத்தலை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை

டெங்கு அச்சுறுத்தலை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை

by Rizwan Segu Mohideen
November 29, 2023 7:04 am 0 comment

நாட்டில் கடந்த சில வாரங்களாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இது வருடா வருடம் இந்நாட்டுக்கு அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் காலப்பகுதியாகும். இந்நாட்டில் மழைவீழ்ச்சியுடன் கூடிய காலப்பகுதியில் சில நோய்கள் தலைதூக்குவது அண்மைக் காலமாக வழமையாகி உள்ளது. அவற்றில் டெங்கு வைரஸ் காய்ச்சலும் ஒன்றாகும்.

அந்த வகையில் தற்போதைய மழைக் காலநிலையுடன் சேர்த்தும் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் நேற்றுமுன்தினம் 27ஆம் திகதி திங்கட்கிழமை வரையும் 75 ஆயிரத்து 377 பேர் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர். அவர்களில் 35 ஆயிரத்து 553 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 15 ஆயிரத்து 953 பேர் கொழும்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தரவுகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கையில் பெரிதும் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்ற போதிலும் கண்டி, காலி, மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தற்போதைய சூழலில் டெங்கு நோய்க்கு உள்ளானவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் நிலைமை காணப்படுகிறது.

டெங்கு வைரஸ் காய்ச்சலானது, மழைநீரினால் ஏற்படக்கூடிய ஒன்றல்ல. அதேநேரம் இவ்வைரஸ் தொடுகையினால் தொற்றிப் பரவக்கூடியதோ அல்லது காற்றின் மூலமோ அல்லது தானாகவோ பரவக்கூடியதுமல்ல. இவ்வைரஸ் பரவுவதற்கு ஒரு காவி அவசியம். அதுவும் எல்லா காவிகள் ஊடாகவும் காவப்படுவதற்கு விரும்பக் கூடியமுமல்ல இந்த டெங்கு வைரஸ்.

நுளம்பினத்தில் காணப்படும் அனோபிளஸ் எஜிப்டைய் என்ற இன நுளம்புகளின் மூலம்தான் இவ்வைரஸ் காவிப் பரப்பப்படுகிறது. அதனைத் தவிர வேறு வழிகளில் இவ்வைரஸ் பரவாது. அதனால் அனோப்பிளஸ் எஜிப்டைய் நுளம்பு இல்லாவிடில் டெங்கு வைரஸ் ஒரு அச்சுறுத்தலாக இருக்காது என்பதுதான் மருத்துவர்களின் கருத்தாகும்.

ஆனால் இவ்வின நுளம்புகள் மழைநீர் உள்ளிட்ட தெளிந்தநீர் தேங்கிக் காணப்படும் பொருட்களில் முட்டையிட்டு பல்கிப் பெருகும் பண்பைக் கொண்டிருக்கின்றன. அதனால் தற்போதைய மழைக் காலத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இவ்வின நுளம்புகள் தெளிந்தநீர் தேங்கும் பொருட்களில் முட்டையிட்டு பெருகுகின்றன. இதுவே தற்போது நுளம்புகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் மழைக்காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

அதன் காரணத்தினால் டெங்கு வைரஸை காவிப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக இவ்வின நுளம்புகள் முட்டையிட்டு பல்கிப் பெருகக்கூடிய வகையில் சுற்றாடலில் காணப்படும் அனைத்து பொருட்களையும் நீர் தேங்க முடியாதபடி ஒழுங்குமுறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதாவது சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பது அவசியம். குறிப்பாக வீட்டிலும் சுற்றாடலிலும் தெளிந்தநீர் தேங்கக்கூடிய வகையில் காணப்படுகின்ற கைவிடப்பட்ட சிரட்டைகள், யோக்கட் கப்கள், பொலித்தீன் உறைகள், பிளாஸ்ரிக் மற்றும் மட்பாண்டப் பொருட்கள், டயர்கள் உள்ளிட்ட அனைத்தையும் தொடராகவும் ஒழுங்குமுறையாகவும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் டெங்கு வைரஸ் நோய் அச்சுறுத்தலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் தற்போதைய சூழலில் காய்ச்சல் அறிகுறியுடன் கூடிய நோய்க்கு உள்ளானால் அது தொடர்பில் கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளவும் கூடாது. அது சில சமயம் டெங்கு வைரஸ் காய்ச்சலாயின் உயிராபத்து அச்சுறுத்தலைக்கூட ஏற்படுத்தி விடலாம். அதன் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்படுமாயின் தாமதிக்காது தகுதியான மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது டெங்கு நோய் தீவிரமடைவதை தவிர்த்துக் கொள்ளவும் நோயைக் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதனால் டெங்கு வைரஸ் அச்சுறுத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் இன்றியமையாதது என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT