Thursday, March 28, 2024
Home » ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி மெய்ஞான அருள்வாக்கி

ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி மெய்ஞான அருள்வாக்கி

- நாளை பிறந்த தினம்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 5:14 pm 0 comment

19 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சிக்குள் சிக்குண்டிருந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தத்தம் சமயங்கள் மற்றும் கலாசாரங்களைப் புத்துயிர்ப்பிக்கும் நோக்கில் பல அறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் என பல மேதைகள் தோன்றி பங்களித்துள்ளனர். அந்த வரிசையில் 19 ஆம் நூற்றாண்டின் இருகடைத் தசாப்தங்களில் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத் தமிழ் வரிசையில் போற்றப்பட வேண்டிய மேதை அருள் வாக்கி அல்லா பிச்சை அப்துல் காதிர் புலவர் ஆவார்.

அவரது நினைவு நாளான பிறந்த நாளையொட்டி இக்கட்டுரையை எழுதுவதில் தெல்தோட்டை மீடியா குழுமம் பேருவகை கொள்கிறது. ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி என போற்றப்படும் அருள் வாக்கி அப்துல் காதிர் புலவர் கண்டி, தெல்தோட்டையின் போப்பிட்டியில் 1866 ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அல்லாப்பிச்சை ராவுத்தர் மற்றும் ஹவ்வா எனும் இந்திய வம்சாவளி தம்பதியினரின் புதல்வராய்ப் பிறந்தார். நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளுடன் பிறந்த புலவர் தந்தை வழியில் இந்திய வம்சாவழியினராகவும் தாய்வழியில் வெத முகாந்திரம் மாமு நெய்னார் வைத்திய திலகத்தின் வம்சா வழியினராகவும் அடையாளம் காணப்படுகிறார்.

புவலர் தமது ஆரம்பக் கல்வியை 1860_- 1871 காலப்பகுதியில் போப்பிட்டிய இஸ்லாமிய மார்க்கக் கல்வி போதிக்கும் மத்ரஸாவிலும், தமிழ் வித்தியாலயத்திலும் கற்றுத் தேர்ந்ததுடன் கண்டியிலுள்ள குயின்ஸ் எகடெமியிலும் கல்வி கற்றுள்ளார். இலக்கியத்தின் மீதிருந்த தனது பற்றுதலை வெளிப்படுத்தத் தொடங்கிய அறிஞர் 1881 களில் யாழ்ப்பாணத்தில் ‘அருள் வாக்கி’ எனும் பட்டம் சூட்டபட்டு கௌரவிக்கப்பட்டார்.

புலவரின் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை இணங்கண்டு கொண்ட அவரது தந்தை அ.பி ராவுத்தர் உயர்கல்விக்காக புலவரை இந்தியாவிலுள்ள திருப்பத்தூர் தமிழ் வித்தியாலயத்திற்கு அனுப்பினார். அங்கு தமிழ் இலக்கியம் கற்றுத் தேர்ந்த அருள்வாக்கி ஈழத்து இஸ்லாமிய தமிழ் உலகிற்கு அன்று முதல் பங்காற்றத் தொடங்கினார்.

முற்றிலும் இலக்கிய மரபு பேணி இலக்கியம் படைக்கும் ஆற்றலைக் கொண்டிருந்த புலவர் நவீனத்தைப் புறக்கணித்துப் பின்னர் இடைக்கால இஸ்லாமிய மரபில் உறுதியாகக் காலூன்றி நின்ற அதன் இறுதி தலைமுறையின் முக்கியமான ஆளுமையாக இஸ்லாமிய இலக்கிய மரபில் அடையாளம் காணப்படுகிறார். ஈழத்து இஸ்லாமிய ஆன்மிகத்துறை மரபின் வளர்ச்சிக்கும் அருள் வாக்கியின் பங்களிப்புகள் பெருமளவில் காணப்படுகின்றன.

சிறந்த தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களைப் படைப்பதில் தன்னிகரற்றவராகத் தன்னை அருள்வாக்கி ஆக்கிக் கொண்டார். அறபுச் சொற்களையும், இஸ்லாமிய கருத்துக்களையும் இலக்கிய அமைப்பில் புகுத்தி அறபு கவிநயத்தையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் முதன்மை பெற்று விளங்கினார். இவரால் படைக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கிய பிரபந்தங்களில் இதற்கான சான்றுகள் நிறையவே காணப்படுகின்றன.

காதிரிய்யா தரீக்காவில்ஈடுபாடு கொண்ட புலவர் தரீக்கா சம்பந்தமாக இடம்பெறும் நிகழ்வுகளின் போதெல்லாம் கவி பாடியுள்ளார். இதனால் இவர் ‘கண்டி தர்ஹா வித்துவான்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அதேசமயம் இஸ்லாமிய கல்வி மேம்பாட்டினை முதலாகக் கொண்டு திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தியுள்ளார். புலவரால் ஆரம்பிக்கப்பட்ட அத்திண்ணைப் பள்ளிகூடமே வித்துவதீப மகாவித்தியாலயமாகவும், இன்று க/எனசல்கொல்ல முஸ்லிம் மத்திய கல்லூரியாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

ஞான வெண்பாப் புவிப்பாவலர், வித்துவசிரோமணி, கவி ராஜசேகரம், பிரபந்த ரத்னாகரம,சமூக வித்துவான், கவிவாணை, மெய்ஞான அருள்வாக்கி, வித்துவ தீபம், காந்த கவிராயர், தர்ஹா வித்துவான், நாவலர், திவ்யகவி நாவலர், அட்டாவதானி என பல பெயர்களால் கௌரவிக்கப்பட்ட பாவலர் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி என கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.

இவ்வாறாக ஈழத்து இஸ்லாமிய இலக்கிய மரபின் அச்சாணியாகத் திகழ்ந்த மெய்ஞான அருள்வாக்கி அல்லாபிச்சை ராவுத்தர் அப்துல் காதிர் புலவர் 1918.09.23 ஆம் திகதி கண்டியில் இயற்கை எய்தினார். அவர் மறைந்து நூற்றாண்டுகள் கடந்தாலும் அவரது இலக்கிய சேவை இலக்கியம் உள்ளவரை வாழும் என்பது உறுதி.

அவர் 1894_-1918 வரை பல நூல்களுக்கு சிறப்புப்பாயிரங்களையும், வாழ்த்துக் கவிகளையும், சாற்றுக் கவிகளையும் வழங்கி ஈழத்திலும், இந்தியாவிலும் பரந்துபட்ட அறிஞர்கள் மத்தியில் தனக்கென ஒர் அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டார். எவ்வாறாயினும் அருள்வாக்கி குறித்த முழுமையான வரலாறு இன்றுவரை ஆவணமாக்கல் செயன்முறைக்கு உள்வாங்கப்படாமை கவலைக்குரியது.

ஏ.ஜே. காஷிபா பர்வின்
BA (Hons in History)
பேராதனைப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT