ஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 68 பேர் பலி | தினகரன்


ஆப்கானில் தற்கொலை தாக்குதல்: 68 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 68 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 165 பேர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் தலைமை பொலிஸ் அதிகாரி நியமனத்திற்கு எதிராக நன்கர்ஹார் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மாகாண தலைநகரில் மூன்று பாடசாலைகளில் சிறு குண்டுகள் வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்து சில மணி நேரங்களிலேயே இந்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தற்கொலை தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காதபோதும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவே அண்மைக் காலங்களில் இவ்வாறான தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் நன்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ் குழு நிலைகொண்டிருப்பதோடு, அந்த குழு பலம் கொண்ட பகுதியாகவும் அது உள்ளது. இந்த தாக்குதலுடன் தமக்கு தொடர்பில்லை என்று தலிபான்கள் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சார் கான் என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, “இளைஞன் ஒருவன் கார் ஒன்றில் இருந்து இறங்கி அல்லாஹு அக்பர் என்று கூச்சலிட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஒடிவந்தான்” என்றார்.

கடந்த வாரம் தலைநகர் காபுலில் விளையாட்டுக் கழகம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை தற்கொலை தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.


Add new comment

Or log in with...