ஆசியக் கிண்ணமும் இலங்கை அணியும் | தினகரன்

ஆசியக் கிண்ணமும் இலங்கை அணியும்

நேற்றைய தொடர்....

2004 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 6

இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின், எட்டாவது அத்தியாயப் போட்டிகளிலேயே இலங்கை மூன்றாவது சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் ஆசியாவில் டெஸ்ட் அந்தஸ்து உள்ள கிரிக்கெட் அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகள் முதல் தடவையாக பங்குபற்றியிருந்தன.

ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் அதனை அடுத்து இடம்பெற்ற “சுபர் 4” சுற்றின் அடிப்படையில் இலங்கை அணியும், இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, இந்தியாவுக்கு சவால் குறைந்த வெற்றி இலக்கான 229 ஓட்டங்களையே நிர்ணயம் செய்தது.

இந்த இலக்கை 50 ஓவர்களில் இந்தியா இலகுவாக அடைந்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உபுல் சந்தன, சனத் ஜயசூரிய ஆகியோரின் சுழல் பந்துவீச்சினை முகம் கொடுக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி 203 ஓட்டங்களையே குவித்து போட்டியில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய அணியை மூன்றாவது தடவையாக வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது சம்பியன்களாக நாமம் சூடினர்.

2008 – பாகிஸ்தான் பங்குபற்றிய அணிகள் – 6

பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் ஒன்பதாவது அத்தியாயப் போட்டிகளிலேயே, இலங்கை தமது நான்காவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றது. இதேநேரம் வெளிநாடு ஒன்றில் இலங்கை அணி வென்ற முதல் ஆசியக் கிண்ணத் தொடராகவும் இது பதிவாகியது.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரிலும், 2004 ஆம் ஆண்டு தொடரில் பங்குபற்றியிருந்த அதே ஆறு அணிகளே பலப்பரீட்சை நடாத்தின. தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளுக்கு அமைவாக இந்திய அணியும், இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கராச்சி தேசிய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, சனத் ஜயசூரியவின் அதிரடி சதத்தோடு சவால் மிக்க வெற்றி இலக்கான 274 ஓட்டங்களை 50 ஓவர்களில் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, விரேந்திர ஷேவாக்கின் அதிரடியோடு நல்ல ஆரம்பத்தை காட்டியிருந்த போதிலும் இலங்கை சார்பில் பந்துவீச வந்த அஜந்த மெண்டிஸ் இந்திய வீரர்களை தனது சுழல் மூலம் நிலைகுலையச் செய்தார்.

இந்திய அணி 173 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மிகவும் மோசமான தோல்வியொன்றை பதிவு செய்தது. அஜந்த மென்டிஸ் வெறும் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் சிறந்ததொரு பந்துவீச்சு பெறுமதியை பதிவு செய்தார்.

இந்த அதிரடி வெற்றியோடு இலங்கை அணி, நான்காவது முறையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தமது நான்காவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினை வென்றது.

 

2014 – பங்களாதேஷ் பங்குபற்றிய அணிகள் – 5

இலங்கை அணி சரிவுகளை சந்திக்க முன் அதனுடைய பொற்காலம் எனக் கருதப்படும், 2014 ஆம் ஆண்டிலேயே ஐந்தாவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினை வென்றது.

பங்களாதேஷில் இடம்பெற்ற இந்த 12 ஆவது அத்தியாய ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன.

தொடரின் முதல் கட்ட போட்டிகளின் அடிப்படையில் எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இலங்கையின் சவாலை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ள பாகிஸ்தான் அணி தயராகியிருந்தது.

சேர்-ஈ-பங்களா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, பவாட் அலாம் பெற்றுக் கொண்ட சதமொன்றுடன் (114*) 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை குவித்தது.

இதன் பின்னர், ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 261 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு, லஹிரு திரிமான்ன சதம் (101) கடந்து நம்பிக்கை அளித்தார். திரிமான்னவின் சதத்தின் உதவியோடு இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை இழந்து 46.2 ஓவர்களில் அடைந்ததுடன், ஆசியக் கிண்ண தொடரின் சம்பியன்களாக ஐந்தாவது தடவையும் நாமம் சூடியது.

அத்தோடு இலங்கை இந்த ஆசியக் கிண்ண வெற்றியோடு ஒரு நாள் போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தை அதிக தடவைகள் (5) வென்ற இந்தியாவின் சாதனையையும் சமநிலை செய்தது.

இப்படியாக ஆசியக் கிண்ணத்தில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் இலங்கை அணி, இம்முறைக்கான தொடரில் என்ன செய்யப் போகின்றது என்பதை நாம் பார்க்க சில நாட்களை பொறுமையாக கடத்த வேண்டி உள்ளது.

 


Add new comment

Or log in with...