சூழல்சார் சவால்களுக்கு இந்துமதம் கூறும் தீர்வுகள் | தினகரன்

சூழல்சார் சவால்களுக்கு இந்துமதம் கூறும் தீர்வுகள்

நவீன உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுள் சூழல் தொடர்பான பிரச்சினைகள் பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. சமூகஆர்வலர்கள் தொடக்கம் உலகத் தலைவர்கள் வரையுள்ள அனைத்துத் தரப்பினரதும் பேசுபொருளாகி விட்ட விடயமாக இது அமைந்துள்ளது.

சூழல் பங்கமுறுவதை எவ்வாறு தடுத்தல்? சூழலை எவ்வாறு பாதுகாத்தல்?என்பன தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தினமும் நடைபெற்ற வண்ணமுள்ளன. இந்துசமயத்தில் குறிப்பாக இந்து தத்துவங்களில் சூழல் பற்றிய சிந்தனையோட்டம் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

அத்துடன், சூழல் தொடர்பாக எழுந்துள்ள சவால்களுக்குரிய தீர்வுகள் பற்றி இந்துசமயம் (இந்து தத்துவம்) கூறியுள்ள சிந்தனைகள் பற்றிய தேடலாகவும் இது அமைகின்றது.

பௌதிகச் சூழலில் நீர்,நிலம்,வளி,ஆகாயம் என்பன அடங்கும். இவற்றையே இந்துசமயம் பஞ்சபூதம் என்கிறது. பண்பாட்டுச் சூழல் என்பதினுள் மனிதர்கள், ஏனைய உயிரினங்கள்,மனிதர்களால் ஆக்கப்பட்டபௌதிகப் பொருள்கள் முதலானவை உள்ளடங்குகின்றன. மனிதன்,கடல்,தரை,காலநிலை,நதிகள்,தாவரக் கூட்டம் என்பன சூழல் தொகுதியில் அடங்கும் என்று ஜெ.எச்.ஜி.லெபன் கூறியுள்ளமை மேற்கூறிய கருத்தியலுடன் தொடர்புபடுவதைக் காணலாம்.

எனினும் நவீன சிந்தனையாளர்கள் மனிதனுக்கும் பௌதிகச் சூழலுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் யாவும் சூழல் தொகுதியில் அடங்கும் என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை வளங்களை உள்ளடக்கிய சூழலுக்கும்,மனிதர்களுக்கும் இடையே நிகழ்ந்தேறும் போராட்டத்தினால் இயற்கைச் சூழலின் சமநிலையில் பங்கம் ஏற்பட்டு, முழு உலகமும் பாரிய பாதிப்பிற்குள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. இதிலிருந்து மீண்டெழுவதற்குரிய வழிமுறைகளை இந்துசமயமும் கூறுகின்றது என்பது இதுவரை கண்டறியப்படாத விடயமாக உள்ளது. இந்துசமயத்திற்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பை இரண்டு நிலைகளில் நோக்கலாம். ஒன்று சமய நம்பிக்கை சார்ந்தது. மற்றையது மெய்யியல் சார்ந்தது. மேலைத்தேய நாடுகளின் மெய்ப்பொருள் விசாரணையில் பௌதிகவியல் முதன்மை பெறுகின்றது. ஆனால் கீழைநாடுகளில் (இந்தியாவில்) பௌதிக அதீதம் முதன்மை பெற்றுள்ளது.

சூழலியலுக்கும், இந்துசமயத்திற்கும் (இந்து தத்துவத்திற்கும்) உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. அது அநாதியானது. இந்தியர்கள் ஆரம்ப காலத்தில் இயற்கையில் கடவுளைக் கண்டமைக்கும்,அதனை கடவுளாக உருவகித்தமைக்கும் வேத இலக்கியங்கள் சான்று. இருக்குவேதத்தின் நாசதீய சூக்தம் பிரபஞ்சப் பொருள்களின் வெளிக்கிளம்புகை தொடர்பான சந்தேகவினாக்களின் உள்ளடக்கமாக அமைந்துள்ளது.

வேதங்களின் அந்தமாக அமைந்த உபநிடதங்கள் குறித்த சிந்தனைகளின் வளர்நிலையைப் பிரதிபலிக்கின்றன. பிரபஞ்சப் பொருள்கள் யாவும் பரம்பொருளாகிய பிரமத்தில் இருந்து தோன்றியுள்ளதாக அவை குறிப்பிட்டுள்ளன. அத்துடன்,பிரபஞ்சப் பொருள்கள் யாவிலும் அப்பரம்பொருள் வியாபித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்துசமய இலக்கியங்களில் தத்துவ நோக்கில் கூறப்பட்டுள்ள சூழலியல் சிந்தனைகள் தொடர்ந்து கோட்பாட்டு ரீதியான வளர்ச்சியைப் பெறத் தொடங்கின. உபநிடதங்களின் வழியில் தனது கோட்பாட்டை நிறுவிய சங்கரரின் அத்வைதத்தில் இக்கருத்துகளைக் காணலாம். அவரின் ஆன்மீக விடுதலை தொடர்பான சிந்தனையுடன் இது இணக்கமுறுகின்றது. பிரபஞ்சப் பொருள்களிலும்,ஆன்மாக்களிலும் பிரமம் வியாபித்திருப்பதாக அவர் கூறுகின்றார்.

அதாவது மனிதனைச் சூழவுள்ள ஏனைய உயிர்களையும்,ஒவ்வொரு பொருள்களையும் பரம்பொருளாகிய பிரமமாகக் காணுதல் வேண்டும். அவற்றுக்கு பரம்பொருளுக்கு அளிக்கும் உயர் நிலையை சிந்தையாலும்,செயலாலும் வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்தகைய ஞானமே ஆன்ம விடுதலைக்குச் சிறந்த வழி என்கிறார் சங்கரர்.

சைவநெறி சார்ந்த சைவசித்தாந்தக் கோட்பாட்டிலும் சூழலியலைப் பிரதிபலிக்கும் வகையிலான கருத்துக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு இந்து தத்துவங்கள் அனைத்திலும் காணத்தக்க பொதுத்தன்மையாதெனில் தத்துவவியலாளர்ளால் பிரமம்,பதி,ஈஸ்வரன் என்று வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படும் பரம்பொருள் பிரபஞ்சத்திலும்,பிரபஞ்சப் பொருள்களிலும் உள்ளுறைந்துள்ளது என்பதாகும். இவ்வாறு உறைந்துள்ள பரம்பொருளை அப்பொருள்களில் கண்டுணரும் நிலையை சங்கரர் பிரமஞானம் எனவும்,சைவசித்தாந்திகள் பதிஞானம் எனவும் கூறியுள்ளனர்.

நவீன சமய,சமூக சீர்திருத்த சிந்தனையாளர்கள் பரம்பொருள் வியாபகக் கொள்கையை சமூகநோக்கில் பயன்படுத்தினார்கள். குறிப்பாக சுவாமி விவேகாநந்தர்,சுவாமி விபுலாநந்தர் முதலானோரைக் கூறலாம். பரம்பொருள் அனைத்திலும் வியாபித்து விளங்குகின்றார். அவர் ஒவ்வொரு மனிதனிலும் மறைந்துள்ளார்.அவ்வாறு மறைந்துள்ள இறைவனை ஏழையிலும் காண வேண்டும் என்பதே சுவாமி விவேகாநந்தர் மனுக்குலத்திற்கு விடுத்த வேண்டுகோள்.

இவ்வாறு மனிதனில் இறைவனைக் காண்பது போல ஒவ்வொரு இயற்கை அம்சங்களிலும் இறைவனைக் காணும் நிலை தற்காலத்தில் பேசப்படும் சூழலியல் பற்றிய எண்ணக்கருவாக அமைந்து விடுகின்றது. இது உன்னைப் போல உன் அயலானையும் நேசி என்பதன் வளர்ச்சிநிலை. உன்னைப் போல் நேசி என்பதற்கு அப்பால் கடவுளைப் போலஅல்லது கடவுளாக நேசி எனும் பரந்தநோக்கு இந்துதத்துவங்களில் உள்ளுறைந்து நிற்கின்றது. சூழலியல் சிந்தனைகளின் ஒருபரிமாணம் என்று இதனைக் கொள்ளலாம்.

எனவே இந்துதத்துவங்களில் பிரதான பேசுபொருளாக அமைந்த பரம்பொருள் வியாபகக் கொள்கை தொடர்பான சிந்தனைகள் நவீன உலகின் பேசுபொருளாக அமைந்த சூழலியல் தொடர்பான கருத்துகளுடன் இணைவுறுகின்றன. மனிதன் தான் வாழும் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு அற்றவனாக வாழ்வதற்குப் பழக்கப்பட்டு விட்டான். சூழல் என்பது தனது தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டது எனும் மனோபாவமே இதற்குக் காரணம். மனிதரிடம் இருக்க வேண்டிய சூழல் பற்றிய சமூகவியல் நோக்கை இந்து தத்துவவியலாளர்கள் கடவுள் பற்றிய பௌதீக அதீதக் கொள்கையின் ஊடாக மிகவும் இலாவகமாக மனித மனங்களில் பதியம் வைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

காலத்திற்குக் காலம் நாஸ்திகவாதக் கருத்துக்கள் தலைதூக்கிய போதிலும் மக்களிடம் ஆழப் பதிந்துள்ள கடவுள் பற்றிய நம்பிக்கைகள் மாற்றமுறவில்லை. இது,ஆத்மிகவாதிகளால் போதிக்கப்பட்ட ஆஸ்திகக் கொள்கை மக்களிடத்தில் சாகாவரம் பெற்று சிரஞ்சீவியாக நிலைபெற்றுள்ளமைக்குச் சான்று. அத்தகைய நம்பிக்கைகளைத் தமக்குச் சாதகமாகக் கையாள வேண்டியது சூழலியல் சிந்தனையாளர்களின் கடப்பாடு.

செ.கமலநாதன்
(ஆசிரிய ஆலோசகர்)
வலயக் கல்வி அலுவலகம்,
மட்டக்களப்பு மேற்கு


Add new comment

Or log in with...