வறிய பெண் கடனாளிகள் மீது பாரிய சுமை ஏற்றப்படுகின்றது | தினகரன்

வறிய பெண் கடனாளிகள் மீது பாரிய சுமை ஏற்றப்படுகின்றது

அனைவரையும் உள்ளடக்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கென இலங்கை முன்னெடுக்கும் அனைத்து வழிமுறைகளிலும் மனித உரிமைகள் மையமாக இருந்துவர வேணடுமென ஐ. நா. நிபுணர் குறிப்பிடுகின்றார்.

“அதன் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதும், அதன் உள்கட்டமைப்பு வசதி மீதும் மனித உரிமைகள் எடுத்து வந்திருக்கும் தாக்கம் குறித்த மதிப்பீடு ஒன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என மனித உரிமைகள் மீது வெளிநாட்டு கடன் எடுத்துவரும் தாக்கங்கள் குறித்த சுயாதீனமான நிபுணரான ஜுவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். அவர் இலங்கையில் மேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் முடிவின் போது வெளியிட்ட அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவாறு, அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் உத்தி சர்வதேச கடன்களுக்கு ஊடாக அரசிறை மற்றும் வெளித் துறைகளை பலப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாகவே இருந்து வந்தது. அது பாரியளவிலான உள்கட்டமைப்பு கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதையும் உள்ளடக்கியிருந்தது. அந்தக் கருத்திட்டங்களில் பெரும்பாலானவை கடந்த கால ஆட்சிகளின் போது தொடங்கி வைக்கப்பட்டிருந்தன” என போஹோஸ்லாவ்ஸ்கி கூறினார்.

“இக்கடன்களை திருப்பிச் செலுத்துவது நாட்டின் மிக முக்கியமான செலவினமாக இருந்து வருகின்றது. மேலும் கணிசமான அளவில் பெறப்படும் கடன்கள் இந்நோக்கத்திற்கென ஒதுக்கப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“எவ்வாறிருப்பினும், தீங்குகள் குறைந்த கொள்கைத் தெரிவுகள் இருந்து வருமானால் அதிகரித்து வரும் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் பொருடடு சமூக நலச் செலவுகளில் வெட்டுக்களை மேற்கொள்ளக்கூடாது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய ஏனைய தெரிவுகள் இருந்து வருகின்றன. அவை முன்னேற்றகரமான வரிச் சீர்திருத்தங்களுக்கு ஊடாக உள்நாட்டுக் கேள்வியைத் தூண்டச் செய்தல், குறைந்தபட்ச சம்பளங்களை அதிகரித்தல் மற்றும் எவரும் புறமொதுக்கப்படாதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வருமானங்களை உருவாக்கக் கொள்வதற்கென கடன் வழங்கியிருப்பவர்களுடன் அக்கடன்கள் தொடர்பான நிபந்தனைகளை மீண்டும் பேசித் தீர்த்துக் கொள்ளல் என்பவற்றையும் உள்ளடக்குகின்றன’என்ற விடயத்தை பொஹோஸ்லாவ்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

“அதிகரித்தளவிலான வளங்கள் திரட்டப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது என்ற விடயம் குறித்து ஒரு கருத்தொற்றுமை நிலவி வருகின்றது. உலகில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமான நிதிப் பாய்ச்சல்களில் பெரும்பாலானவை தேச எல்லைகளைக் கடந்து இடம்பெறும் வரி சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களாக இருந்து வருகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், வரி ஏய்ப்பு நாட்டில் ஒரு பாரதூரமான குற்றச் செயலாக கருதப்படாதிருப்பதன் காரணமாக, வரி ஏய்ப்பு தொடர்பாக தமது வாடிக்கையாளர்களினால் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிட வேண்டிய கடமையை வங்கிகள் கொண்டிருக்கவில்லை. இந்த சட்ட ரீதியான இடைவெளியை அகற்ற வேண்டுமென நான் அரசாங்கத்திடம் வலிந்து கேட்டுக்கொள்கிறேன்’

2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததனை அடுத்து கொழும்பு வெளி சுற்றுவட்ட கடுகதிப் பாதை, மின் உற்பத்தி நிலையங்கள், அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் அம்பாந்தோட்டை விமான நிலையம் என்பவற்றையும் உள்ளடக்கிய பாரியளவிலான உள்கட்டமைப்பு கருத்திட்டங்கள் நாடெங்கிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

“அத்தகைய உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அவை மனித உரிமைகள் மீது செலுத்தக்கூடிய தாக்கம் குறித்த விரிவான ஒரு மதிப்பீட்டை நடத்த வேண்டும் என்ற கடப்பாட்டை இலங்கையின் சட்டத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கவில்லை. எனவே, தற்போதைய சர்வதேச மனித உரிமைகள் தர நியமனங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வலுவான அனைத்துமடங்கிய சட்டங்களை நிறைவேற்றி வைக்க வேண்டுமென நான் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுகின்றேன்”

“உலகெங்கிலும் பெருந்தொகையான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவியிருக்கும் நுண்நிதி கடனளிப்பு தொடர்பாகவும் நான் விசேடமாக கவனம் செலுத்தியிருந்தேன். இந்த நுண்நிதி கடனளிப்பு வசதிகள் தமது வாழ்வாதாரங்களை பராமரிப்பதற்கு கடன் பெறுபபவர்களுக்கு இயலுமையை வழங்குவதன் மூலம் இதனை மேற்கொண்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும், கடனளிப்பவர்களினால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை, அவை அடிக்கடி இடம்பெறும் நிலை மற்றும் அவற்றின் பாரதூரமான இயல்பு என்பவற்றை நான் இலங்கையில் அவதானித்திருப்பதுடன் அரசு இது தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்”

“பாரிய எண்ணிக்கையிலான கடன் பெறுபவர்கள் இருந்து வரும் அதே வேளையில், வறுமை நிலவும் பிரதேசங்களாகவும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகவும் இருந்துவரும் பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் குறிப்பாக நுண்நிதி கடனளிப்பு நிறுவனங்களின் இலக்காக இருந்து வருகின்றார்கள் என்ற விடயத்தை நான் அவதானித்துள்ளேன். அந்நிறுவனங்கள் தமது கடன்கள் தொடர்பாக 220 சதவீதம் வரையிலான வட்டி வீதங்களை அறவிட்டு வருவதுடன், கூட்டுவட்டி கணிப்பு முறையை பின்பற்றுகின்றன.

இப்பொறிமுறைகள் கடன் வழங்குபவர்களுக்கு பாரியளவிலான இலாபங்களை ஈட்டிக்கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், பெருமளவுக்கு வறியவர்களாக இருந்துவரும் பெண் கடனாளிகளின் தோள்களின் மீது ஒரு பாரிய சுமையை சுமத்தியுள்ளன” ‘ஒரே நேரத்தில் பல்வேறு கடனளிப்பு நிறுவனங்களிலிருந்து மூன்று அல்லது நான்கு கடன்களைப் பெற்று அவற்றை நிலுவையில் வைத்திருக்கும் பெண்களை சர்வசாதாரணமாக பார்க்க முடிகின்றது.

அதே வேளையில், வேறு சிலர் ஏற்கனவே தாம் பெற்றுக் கொண்டிருக்கும் கடன்கள் தவணை தப்பிய கடன்களாக மாறுவதனை தவிர்த்துக் கொள்வதற்கென மேலும் கடன்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். தமக்குச் சேர கூடிய தவணைக் கடடணங்களைச் சேகரிப்பதற்கென சில சந்தர்ப்பங்களில் நாளாந்த அடிப்படையில் கடன் சேகரிப்பவர்கள் கடனாளிகளின் வீடுகளுக்கு செல்கின்றார்கள். அவ்விதம் செல்லும் ஒரு சிலர் அத்தொகைகள் திருப்பிச் செலுத்தப்படும் வரையில் அக்குடும்ப வீட்டில் பல மணித்தியாலங்கள் தரித்து நிற்கின்றனர்.

“இத்தகைய கடன் சேகரிப்பாளர்களினால் எல்லா சந்தர்ப்பங்களிலும் உளவியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான அத்துமீறல்களை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து நிலையில் பெண்கள் இருந்து வருகின்றனர். ஒரு சில சம்பவங்களில் நிலுவையிலிருந்து வரும் தவணைக் கட்டணங்களுக்கு பதிலாக தமக்கு “பாலியல் சலுகைகள்” வழங்க வேண்டுமென ஒரு சில கடன் சேகரிப்பாளர்களினால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயம் எனது கவனத்திற்கு எடுத்து வரப்பட்டிருந்தது. மேலும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு பணத்தை பெற்றுக்கொள்வதற்கென அவ்விதம் கடன் பெற்றிருக்கும் ஒரு சிலர் தமது சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு முயன்றுள்ள சம்பவங்கள் குறித்தும் நான் அறிந்துள்ளேன்”

“இந்த நிறுவனங்கள் தொடர்பாக ஒரு வட்டி வீத உச்சவரம்பை உருவாக்குமாறும், வலுவான கண்டிப்பான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றி, அவற்றை அமுல் செய்யுமாறும் நான் அரசாங்கத்திடம் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

நுண்நிதிக் கடனளிப்பு நிறுவனங்கள் கடன் தர நியமங்களுடன் பொருந்தக்கூடிய விதத்தில் வழிகாட்டுதல்கள் இருந்து வருதல் வேண்டும். இச்சட்டவாக்கம் நிறைவேற்றப்படும் வரையில், கடனளிப்பு நிறுவனங்களினால் மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வரும் குழுக்கள் சுரண்டப்படுவதனையும், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதனையும் தடுத்துக்கொள்ளும் பொருட்டு கடன் தவணைக் கட்டணங்களை செலுத்துவதனை நிறுத்தி வைக்கும் ஒரு காலப் பிரிவை பிரகடனம் செய்ய வேண்டுமென நான் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்’ என இந்நிபுணர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சுயாதீன நிபுணர் தனது விஜயம் குறித்த விரிவான அறிக்கையை 2019 மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பவுள்ளார்.


Add new comment

Or log in with...