சாளம்பைக்குளத்தில் மீளக்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் | தினகரன்

சாளம்பைக்குளத்தில் மீளக்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள்

இனங்களுக்கு இடையிலான மோதல் அல்லது யுத்தம் இடம்பெறுகின்ற நாடொன்றில் இடம்பெயர்தலும், மீளக்குடியேர்தலும் சாதாரணமாக நிகழ்பவை. அதற்கு இலங்கைத் தேசம் விதிவிலக்கானதல்ல.

30வருட காலம் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் வடபுலத்திலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல மீளக்குடியேறத் தொடங்கினர்.

வடமாகாணத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் 1990ஆம் ஆண்டுகளில் 24மணி நேரத்துக்குள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் குருநாகல், புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் அகதிகளாக குடியேறியிருந்தனர்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 30இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் அண்மையில் வடபகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீளக்குடியேற்றம். அதிலுள்ள சவால்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மீளக்குடியமர்ந்த மக்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்தினர்.

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறுவதற்காக அங்குள்ள அடையாளமாக சாளம்பைக்குளம் மேற்கு தைக்கா பள்ளிவாசலையே கண்டுகொண்டனர்.

சாளம்பைக்குளம் 300வருடங்கள் ப​ைழமை வாய்ந்த கிராமம் என்று சொல்கின்றார் பள்ளிவாசல் தலைவர் அப்துர் றஹீம்.

1990களில் 10மணிநேர அவகாசத்துக்குள் தாங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அச்சமயம் குறித்த பள்ளிவாசலைச் சூழ 300குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் அவர கூறினார். இடம்பெயர்ந்து அநுராதபுரம் மாவட்ட இக்கிரகொல்லாவ, தல்கஹ போன்ற பிரதேசங்களில் 13வருடங்களாக கொட்டகைகளிலே வாழந்ததாகவும் கூறினார் அப்துல் றஹீம்.

2005, 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீளக்குடியேறுதலுக்கான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றதாகவும், மீளக்குடியேறுதல் என்பது சவால் நிறைந்ததொரு விடயமாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார் அவர்.

வனபரிபாலன திணைக்களம் கையகப்படுத்திய காணிகளில் 300ஏக்கர் காணியை சட்டத்துக்கு அமைவாக விடுவிப்புச் செய்தே தற்போது அம்மக்கள் குறியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரதேசம் புதிய சாளம்பைக்குளம் என அழைக்கப்படுவதாகவும், இந்திய அரசு அதற்கான வீட்டுத் திட்டத்துக்கு உதவி செய்ததாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது.

சாளம்பைக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயிகள். இங்குள்ள காணிகளில் விவசாயம் செய்தே தங்கள் வாழ்வியலை கொண்டு நடத்தியுள்ளனர். ஆனால் வன திணைக்களம் 600 ஏக்கர் காணியை கற்களை இட்டு அடையாளப்படுத்தியதனால் காணிகளுக்குள் குடியேறி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீர்செய்து கொடுப்பதனால் விவசாயத்தை மேற்கொண்டு தத்தமது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் என்றும் நம்புகின்றனர் அம்மக்கள்.

இக்குடும்பங்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கின்ற விடயத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பணியாற்றியிருக்கின்றார் என்பதனை அங்குள்ள மக்களின் கருத்துக்களிலிருந்து அறியமுடிகின்றது.

சாளம்பைக்குளம் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் அத்தனை பேருக்கும் அச்சுறுத்தலான விடயம் அங்குள்ள குப்பை மேடு.

இந்தப் பிரதேசத்தில் நிறுவபட்டுள்ள திணமக்கழிவற்றும் பகுதியில் வவுனியா நகரசபை, வவுனியா பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பகுதிகளின் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

புதிய சாளம்பைக்குளம் பகுதியை அண்மித்து இப்பகுதி நிறுவப்பட்டுள்ளதால் இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் ஒரு சில அதிகாரிகளின் எதிர் நடவடிக்கையினால் அவை காலம் தாழ்த்தப்படுவதாக அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குப்பை மேட்டுப் பகுதியை அண்மித்தே சாளம்பைக்குளம் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டதாகவும், மக்கள் குடியேறுவதற்கு முன்பே திண்மக்கழிவகற்றலுக்கு குறித்த இடம் அடையாளப்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏராளமானவை. பலர் உயிர் இழந்திருக்கின்றனர், சுவாச நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள சிப்பாய்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

திண்மக்கழிவகற்றலுக்குப் பொருத்தமான வேறு மூன்று இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அதனை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பதையிட்டு இம்மக்கள் கவலைப்பட்டுக் கொள்கின்றனர்.

இந்த திண்ணமக்கழிவகற்றும் நிலையம் வேறு ஒரு பொருத்தமான இடத்துக்கு மாற்றப்படுவதனூடாக இங்குள்ள மக்களின் வாழ்வியலில் ஒளி ஏற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

மக்கள் மீளக்குடியேறிய பின்னர் நிம்மதியாக வாழ்கின்ற சூழலொன்றினை ஏற்படுத்துவது அவசியம்.

றிசாத் ஏ காதர்
ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...