3 ஆவது திருமணத்துக்கு தயாரான மாப்பிள்ளை மணமேடையில் கைது | தினகரன்

3 ஆவது திருமணத்துக்கு தயாரான மாப்பிள்ளை மணமேடையில் கைது

வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, கந்தசாமி ஆலய திருமண மண்டபத்தில் மண மேடைக்கு செல்ல தயாராகவிருந்த மாப்பிள்ளை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது மனைவியின் முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் மாப்பிள்ளையை நேற்று கைது செய்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் ஒருவரை திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில் வேறு ஒரு திருமணம் முடித்து அப்பெண்ணையும் கைவிட்டு விட்டு நேற்று வவுனியாவில் மூன்றாவது திருமணம் முடிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது மனைவி சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் போது, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் பெண்ணை இவர் கைவிட்டுள்ளார். இதனால் அப்பெண் வெளிநாடு சென்று தனது பிள்ளைகளைக் கவனித்து வருகின்றார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் என்னைத் இவர் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது என்னையும் கைவிட்டுவிட்டு வவுனியா கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரைத் திருமணம் முடிக்க முயற்சிப்பது எனக்குத் தெரிய வந்தது. எனவே இதனைத் தடுத்து நிறுத்தி இவ்வாறான கயவர்களின் முகத்திரையைக் கிழிப்பதுடன் சமூகத்திற்கு இவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்றே நான் இவ்வாறு துணிச்சலுடன் நடந்து கொண்டுள்ளேன். கடந்த வருடத்திலிருந்து என்னுடன் முரண்பட்டுக் கொண்டிருந்ததுடன், சீதனம் கேட்டும் வற்பறுத்தி வந்துள்ளார். இவர் பணத்திற்காகவே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு என்னைக் கைவிட்டுவிட்டு சென்ற நிலையிலும் என்னுடன் நேற்று முன்தினம் இரவு வரையில் தொலைபேசியில் தொடர்புடனேயே இருந்தார்.

இதையடுத்து எனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்துகொண்டேன். அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சென்றேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த 2017 டிசம்பர் மாதம் 22ஆம் திகதி, 2018 பெப்ரவரி 03 ஆம் திகதிகளில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் மாப்பிள்ளைக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதாகவும் முறைப்பாடும் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்றுக் காலை நடைபெறவிருந்த திருமணமும் வவுனியா ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டது.

மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளை பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார். இரண்டாவது மனைவியின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மாப்பிள்ளையை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்


Add new comment

Or log in with...