இலங்கையில் அரசாங்க முதலீடுகள் சாத்தியமில்லை | தினகரன்

இலங்கையில் அரசாங்க முதலீடுகள் சாத்தியமில்லை

தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற புதிய சட்டங்கள்

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச முதலீடுகள் மாத்திரம் போதுமானதாக இல்லை என்பதால், தனியார் துறையினரின் முதலீடுகளையும் பெற்றுக்கொள்வது தொடர்பாக பிராந்திய நாடுகளிடையே பொதுவான கலந்துரையாடல் அவசியமானதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் தெரிவித்தார்.

அரச, தனியார் துறையினர் இணைந்து அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காகத் தனியார் துறையினரை ஊக்குவிக்குமுகமாக இலங்கையில் புதிதாகப் பல்வேறு சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

வியட்நாமின் ஹனோய் நகரிலுள்ள தேசிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுக்கு இணைவாக ஆசியான் அமைப்புத் தலைவர்கள் அமர்வின் ஆரம்பத்தில் பிரதமர் உரையாற்றினார்.

அமர்வை ஆரம்பித்துவைத்துக் கருத்து தெரிவித்த உலக பொருளாதார மாநாட்டு முகாமைத்துவ சபையின் தலைவர் போர்க் பிராண்டே,

அடுத்த 15 ஆண்டுக்கான எதிர்வுகூறலுக்கு அமைவாக, ஆசிய பிராந்திய அபிவிருத்திக்குத் தேவையான நிதியை அரச துறையால் மாத்திரம் எவ்விதத்திலும் வழங்கக்கூடிய சாத்தியம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

எனவே, தனியார் துறையினரின் நிதி வளத்தை, நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கான மூலோபாயங்களைத் துரிதமாகக் கண்டறிய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இந்தோனேசிய சமுத்திர விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுகுட் பின்சர் பஞ்செய்டான், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கிழக்காசிய, தென்கிழக்காசிய, ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான உப தலைவர் ஸ்ரீவன் ஜீ.குறோஸ், வியட்நாம் கூட்டுக் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தொன் லெம், கிறெடிற் சுவிஸ் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய உப தலைவர் ஜோசே இசித்ரோ கெமரோ ஆகியோரும் கருத்துகளை முன்வைத்தனர்.

தமது நாடுகளில் தனியார் துறையினரின் பங்களிப்பை அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்குப் பெற்றுக்கொண்ட விதம் பற்றியும் அதன்போது எதிர்நோக்கிய சவால்கள், அனுபவங்கள் பற்றியும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

இந்த அமர்வை ஜப்பானிய எம்.யூ.எப்.ஜீ வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்தோபர் மார்க்ஸ் நெறிப்படுத்தினார்.

1971ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட உலக பொருளாதார பேரவையின் 27ஆவது மாநாட்டின் பிரதான அமர்வு நேற்றுக்காலை ஆரம்பமாகியதுடன் இன்று 13ஆம் திகதி மாலை நிறைவுபெறும்.

இம்முறை இந்த மாநாடு ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளினதும் அந்த நாடுகளுடன் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ள ஏனைய நாடுகளினதும் உலகின் வேறு நாடுகளின் பங்களிப்புடன் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வியட்நாமிலிருந்து விசு கருணாநிதி


Add new comment

Or log in with...