இந்துக் கோயில்களில் மிருக பலிக்கு தடை | தினகரன்


இந்துக் கோயில்களில் மிருக பலிக்கு தடை

 

அமைச்சர் சுவாமிநாதனின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்துக் கோவில்கள் மற்றும் கோவில் வளாகங்களில் நடத்தப்படும் மிருக பலிகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய விவகார அமைச்சர் என்ற ரீதியில் டி.எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (11) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்தையடுத்து எந்தவொரு இந்துக் கோயில்களிலும் மிருக பலி நடைபெறக் கூடாது என்பதுடன் அவ்வாறு நடைபெற்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய இது தொடர்பில் சட்டவரைபைத் தயாரிப்பதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆற்றுப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

இந்து மதத்தின் பெயரால் செய்யப்படுகின்ற மிருக வதையை ஒழுங்குபடுத்துவதற்கு நிறுவன ரீதியான முறையொன்று இல்லாததுடன், கோவில்களின் நிர்வாகம், தனி நபரினால் அல்லது மக்களால் நியமிக்கப்பட்ட முகாமைக் குழுக்களால் நடத்தப்படுகின்றது.

மிருகபலி, இந்து மதத்தின் பாரம்பரிய முறை என்ற போதிலும் பெரும்பாலான இந்து மதத்தினர் இந்த முறையை ஏற்றுக் கொள்வதில்லை.

மிருக பலியை தண்டனை வழங்கக் கூடிய சட்டமாக்கப்பட வேண்டும் என்பது இந்து மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை இந்து சங்கத்தின் கருத்தாகும் என்று இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து ஆலயங்கள் சில வற்றில் இடம்பெறும் மிருகபலிகள் கடந்த காலங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இதனைத் தடுப்பதற்கு விரைவில் சட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதியுடன் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...