மலக்குடலில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தவர் டெல்லியில் கைது | தினகரன்

மலக்குடலில் ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தவர் டெல்லியில் கைது

தனது மலக்குடலின் உட்புறம் தங்கம் கடத்தி வந்த ஆசாமி நேற்று முன்தினம் டெல்லி விமான நிலையத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 1.04. கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

‘‘நேற்று முன்தினம் துபாயிலிருந்து வந்த 24 வயதுப் பயணி ஒருவர், டெல்லி விமான நிலையம் வரும்போது சந்தேகத்திற்கிடமான வகையில் தயங்கித் தயங்கி நடந்து வந்துகொண்டிருந்தார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை இடைமறித்தனர். அவரது மூட்டை முடிச்சுகள் முழுவதும் விரிவான சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அப்போது அவரது உடலிலும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மலக்குடல் உட்புறம் 1.04 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து எடுத்துவந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இன்னொரு சம்பவத்தில், பிரான்ஸைச் சேர்ந்தவர் ஒருவரும் ஒரு இந்தியரும் இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள்.

நேற்று முன்தினம் டெல்லி விமான நிலையத்தில் இவர்கள் பிடிப்பட்டனர். இதில் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தார்.

பயணிகளிடம் அவர்களது உடல்களிலும் பைகளிலும் விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக அவர்களிடமிருந்து 1.5 கிலோ கிராம் எடையுள்ள ஒரு தங்கக் கட்டியும் ஐந்து தங்க பிஸ்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்’’ என டெல்லி விமான நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...