Thursday, March 28, 2024
Home » காசா போர் நிறுத்தம் 2 நாட்களுக்கு நீடிப்பு; மேலும் பணயக்கைதிகள், பலஸ்தீனர்கள் விடுதலை

காசா போர் நிறுத்தம் 2 நாட்களுக்கு நீடிப்பு; மேலும் பணயக்கைதிகள், பலஸ்தீனர்கள் விடுதலை

by Rizwan Segu Mohideen
November 29, 2023 10:42 am 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்ட நிலையில் ஐந்தாவது நாளாக போர் நிறுத்தம் நேற்றும் (28) கடைப்பிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் எட்டப்பட்ட நான்கு நாள் போர் நிறுத்தத்தில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்ட நிலையில் நீடிக்கப்பட்ட தினங்களில் மேலும் விடுதலைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெடித்த போரில் இஸ்ரேல் காசா மீது கடந்த ஒன்றரை மாதமாக இடைவிடாது குண்டு தாக்குதல்களை நடத்தியதோடு தனது தரைப்படையையும் அங்கு அனுப்பியது.

இந்நிலையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் நான்காவது நாளான கடந்த திங்கட்கிழமை 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. இதன்மூலம் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் ஆரம்பக்கப்பட்டது தொடக்கம் காசாவில் இருந்து மொத்தம் 69 இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதன்போதும் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

இந்நிலையில் நேற்றுக் கலையுடன் நான்கு நாள் போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் அந்தப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை மற்றும் மத்தியஸ்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கட்டார் அறிவித்தது. நீடிக்கப்பட்டிருக்கும் இந்த போர் நிறுத்தத்தில் எட்டப்பட்ட உடன்பாடுகள் பற்றி இஸ்ரேல் எந்தக் கருத்து வெளியிடாதபோதும், மேலதிக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டால் மேலும் 50 பலஸ்தீன பெண் கைதிகளை விடுவிப்பதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

நாளுக்கு 10 பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வகையில் போர் நிறுத்தம் நீடிக்கப்படும் என்று இஸ்ரேல் முன்னதாகக் கூறியிருந்தது. போர் நிறுத்தம் மேலதிகமாக இரு தினங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை கட்டார் வெளியுறவு அமைச்சர் மாஜித் அல் அன்சாரி எக்ஸ் சமூகதளத்தில் திங்கட்கிழமை (27) அறிவித்தார்.

வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் கிர்பி, போர் நிறுத்த நீடிப்பை வரவேற்றுள்ளார். “இந்த மனிதாபிமான போர் நிறுத்தம் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டு சண்டையை நிறுத்தியுள்ளது. அடுத்து இரு தினங்களில் 20 பெண் மற்றும் சிறுவர்களை விடுவிக்க ஹமாஸ் இணங்கிய நிலையில் போர் நிறுத்தம் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படுகிறது” என்று கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.

“இந்தப் போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது ஹமாஸ் தொடர்ந்து பணயக்கைதிகளை விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மருந்துப்பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவை தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தாலும், நிவாரணப் பொருட்களில் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 200 லொறிகள் வீதம் இரண்டு மாதங்களுக்கு நிவாரண உதவிகள் காசாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உத்தியை மாற்றும் ஹமாஸ்
கடந்த திங்கட்கிழமை கைதிகள் பரிமாற்றம் ஆரம்பிக்கப்படும் முன்னர் காசாவில் தொடர்ந்து 184 பேர் பணயக்கைதிகளை இருப்பதாக இஸ்ரேல் கூறியிருந்து. இதில் 14 வெளிநாட்டவர்கள் மற்றும் 80 இரட்டை பிரஜா உரிமை பெற்ற இஸ்ரேலியர்கள் அடங்குகின்றனர்.

இதில் மேலதிகமாக 40 பணயக்கைதிகள் வரை விடுவிக்க ஹமாஸ் தயாராகி வருவதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிறன்று பி.பி.சி தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார். இதன்படி நாளுக்கு 10 பேர் வீதம் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. மறுபுறம் இஸ்ரேல் நாளுக்கு நாள் அடிப்படையில் அணுகுமுறையை கையாண்டு வருகிறது. எனினும் போர் நிறுத்திற்குப் பின் காசாவில் மீண்டும் போரை ஆரம்பிப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

“ஒரு சில நாட்களே உள்ளன. நாம் மீண்டும் போருக்குத் திரும்புவோம். அதே அளவான மற்றும் அதற்கு மேற்பட்ட சக்தியை நாம் பயன்படுத்துவோம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவான் கலன்ட், இஸ்ரேலிய துருப்புகளுடனான சந்திப்பு ஒன்றி கூறியதாக ‘டைம் ஒப் இஸ்ரேல்’ செய்தி இணையதளம் குறிப்பிட்டுள்ளது. “ஒட்டுமொத்த காசாவிலும் நாம் போர் புரிவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகளில் பெண் மற்றும் சிறுவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான விதிமுறைகளை மாற்றவிருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.

“அடுத்த இரண்டு நாட்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல் உடன்படிக்கையை) கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அப்பால் மற்ற பிரிவுகளில் உள்ளவர்களை பரிமாற்றுவதற்கான புதிய உடன்படிக்கை ஒன்றை நாம் நாடியுள்ளோம்” என்று ஹமாஸ் அதிகாரியான காலித் அல் ஹய்யா, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார். இதன்மூலம் கைதிகள் பரிமாற்றத்தை நீடிப்பது குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பிடியில் தொடர்ந்தும் இருக்கும் பயணக்கைதிகளில் அண்மைய நாட்களில் விடுவிக்கப்பட்டவர்களின் கணவன் மற்றும் தந்தைமார்களும் உள்ளனர்.

எவ்வாறாயினும் ஹமாஸ் தவிர மற்றப் போராட்டக் குழுக்களின் பிடியிலும் பணயக்கைதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் கட்டாரிடம் கூறியிருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதில் சில பணயக்கைதிகள் பலஸ்தீன இஸ்லாமிய ஜியாத் போன்ற ஏனைய சிறிய போராட்ட குழுவினரின் பிடியிலும் உள்ளனர். இதில் 20 பேர் இருக்கும் இடங்களை ஹமாஸ் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர். ஏனையோர் இருக்கும் இடங்கள் கண்டறியப்படும் பட்சத்திலேயே போர் நிறுத்தத்தை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

எனினும் காசாவில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

விட்டுப் பிடிக்கும் இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்தத்தை நீடித்து மேலும் பல பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் அதேநேரம் இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சுற்றிவளைப்பு தேடுதல்களை நடத்தி மேலும் பலஸ்தீர்களை கைது செய்து வருகிறது. மேற்குக் கரையில் நூற்றுக்கணக்கான பலஸ்தீன இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெய்டுனியா மற்றும் கப்ர் அயின் சிறு நகரங்கள் மற்றும் ரமல்லாவின் மேற்கு பகுதியில் இஸ்ரேலிய படை நேற்று (28) நடத்திய சுற்றிவளைப்பில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் 3,200க்கும் அதிகமான பலஸ்தீனர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாக பலஸ்தீன கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகள் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீடுகளில் இருந்தும் சோதனைச்சாவடிகளில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் விடுவிக்கப்படும் பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை வரவேற்பதற்காக இஸ்ரேலின் ஒபர் சிறைக்கு வெளியில் திரண்ட பலஸ்தீனர்கள் மீதும் இஸ்ரேலியப் படை கண்ணீர்புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

ஜெரூசலத்தில் உள்ள தடுப்பு மையம் ஒன்று மற்றும் சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட 33 பலஸ்தீன கைதிகளில் 30 சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT