பொருளாதார பிரதிபலன்களை கொண்டுவரும் வியட்நாம் விஜயம் | தினகரன்


பொருளாதார பிரதிபலன்களை கொண்டுவரும் வியட்நாம் விஜயம்

தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உலக பொருளாதார மாநாடு வியட்நாம் நாட்டின் தலைநகரில் கடந்த 11 ஆம் திகதி முதல் மூன்று நாட்களாக நடைபெறுகின்றது. இந்த சர்வதேச மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதற்காக இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பின் 50வது பொன்விழாவின் போது தென்கிழக்காசிய நாடுகள் முகங்கொடுத்துள்ள சமூக, பொருளாதார ரீதியான சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன. இந்த நாடுகளில் அடுத்து வரும் 15 வருடங்களில் நாளொன்றுக்கு 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் அமர்த்துவது குறித்தும் அதன்போது ஏற்படுகின்ற சிக்கல்களை தீர்த்துவைப்பது குறித்தும் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. அதன் தொடராகத் தான் இந்த உலக பொருளாதார மாநாடு வியட்நாமில் நடைபெறுகின்றது.

இம்மாநாட்டின் நிறைவில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. அத்தீர்மானங்களின் பிரதிபலன்கள் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் அதனை அண்டிய பிராந்தியங்களிலுள்ள நாடுகளுக்கும் கூட கிடைக்கப்பெற முடியும்.

இவ்வாறு முக்கியத்துவமிக்க சர்வதேச மாநாட்டில் இலங்கை பிரதி நிதித்துவப்படுத்தப்பட்டிருப்பது இந்நாட்டுக்கு பெரிதும் பயன்மிக்கதாக அமையும். அதாவது இந்த ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. அந்தடிப்படையில் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் சிங்கப்பூர் நாட்டுடன் இலங்கை ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்துள்ளது. இதேபோன்று இவ் வமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை ஆர்வம் காட்டியுள்ளது.

இவ்வாறான சூழலில் வியட்நாமில் நடைபெறுகின்ற இந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டுப் பிரதமருடனும் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றை நேற்றுமுன்தினம் நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது வியட்நாம் பிரதமர் “இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் இராஜதந்திர உறவை மாத்திரமல்லாமல் பாராளுமன்ற, அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுக்கிடையிலான நல்லுறவையும் கட்டியெழுப்பி வளர்த்தெடுப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.

அதேநேரம், 'அநேக வியட்நாம் நாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றனர். அதன் காரணத்தினால் இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இல ங்கை பிரதமரின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார். இச்சமயம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'இந்த நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர இலங்கை தயாராகவிருப்பதாக' கூறியுள்ளார்.

இதனடிப்படையில் வியட்நாம் உல்லாசப் பயணிகளின் வசதி கருதி இரு நாடுகளுக்கிடையிலான விஸா நடைமுறையை இலகுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் விரைவில் நடாத்தப்பட உள்ளது.

அதேநேரம் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்றை வியட்நாமுக்கு அனுப்பி வைக்கவும், அதனைத் தொடர்ந்து வர்த்தக விவகாரங்கள் தொடர்பான கருத்துப் பரிமாறல்களை தொடர்ந்தும் மேற்கொள்ளவும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருநாட்டு பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு, கடற்றொழில் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்படி பிரதமரின் இந்த விஜயம் இலங்கைக்கு பாரிய பொருளாதார நன்மைகளை கொண்டு வரக்கூடியதாக அமைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கிடையிலான இராஜதந்திர உறவு 1970 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 48 வருட காலப் பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வியட்நாம் விஜயம் இலங்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். அது பொருளாதாரப் பிரதிபலன்களை இந்நாட்டுக்கு நிச்சயம் கொண்டுவரும்.

வியட்நாம் நாடானது 1955 முதல் 1975 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யுத்தத்திற்கு முகம்கொடுத்தது. இந்த யுத்தத்தில் அமெரிக்காவும் கூட ஒரு கட்டத்தில் நேரடியாக பங்குபற்றியது. என்றாலும் 20 வருட கால யுத்தம் முடிவுற்ற பின்னர் வியட்நாம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளின் பயனாக அந்நாடு கைத்தொழில் பொருளாதாரத் துறையில் பாரிய வளர்ச்சி கண்டுவரும் ஒரு நாடாக மாறியுள்ளது. அந்த வளர்ச்சியானது பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாகவும் விளங்குகின்றது.

அந்த வகையில் 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுத்த இலங்கையை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்கின்றது. இந்த அரசாங்கத்தின் திட்டத்திற்கு வியட்நாம் அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்களையும் அனுபவங்களையும் முன்னுதாரணமாக கொள்ள முடியும். இந்த வகையில் பிரதமரின் இவ்விஜயம் இலங்கைக்கு சுபீட்சத்தையும் பொருளாதார பிரதிபலன்களையும் நிச்சயம் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.


Add new comment

Or log in with...