சிரியாவின் இத்லிப் தாக்குதல்களால் இதுவரை 30,000 பேர் வெளியேற்றம் | தினகரன்


சிரியாவின் இத்லிப் தாக்குதல்களால் இதுவரை 30,000 பேர் வெளியேற்றம்

சிரிய அரச படை மற்றும் அதன் கூட்டணி கடந்த வாரம் வான் மற்றும் தரைவழி குண்டுவீச்சுகளை ஆரம்பித்தது தொடக்கம் வடமேற்கு சிரியாவில் இருந்து இதுவரை 30,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி கோட்டையில் முழுமையான யுத்தம் ஒன்று வெடித்தால் 800,000 பேர் வரை வெளியேற வாய்ப்பு இருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது. இது 21 ஆம் நூற்றாண்டின் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் லோகொக் எச்சரித்துள்ளார்.

வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் வசமிருக்கும் இத்லிப் மாகாணத்தை மீட்க ரஷ்யா மற்றும் ஈரானின் ஆதரவுடன் அரசு படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகிறது.

இங்கு ரஷ்ய மற்றும் சிரிய போர் விமானங்கள் கடந்த வாரம் தொடக்க குண்டு வீச ஆரம்பித்திருப்பதோடு, இங்கு யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் துருக்கியின் முயற்சி கடந்த வெள்ளிக்கிழமை தோல்வி அடைந்தது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் இருந்து 30,542 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் டேவிட் சாம்பசன் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இத்லிப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் மாகாணத்தில் சுமார் 2.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பாதியளவானவர்கள் சிரியாவின் ஏனைய பகுதிகளில் இருந்து ஏற்கனவே இடம்பெயர்ந்து அங்கு வந்தவர்களாவர்.

“பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களின் இடம்பெயர்வுகளுக்கான சாத்தியம் குறித்து நாம் தயார் நிலையில் இருக்கிறோம்” என்று மார்க் லோகொக் ஜெனீவாவில் வைத்து குறிப்பிட்டார்.

உக்கிர வான் தாக்குதல்கள் காரணமாக கடந்த மூன்று நாட்களில் வடக்கு மற்றும் மேற்கு ஹாமா மற்றும் தெற்கு இத்லிப் மாகாணங்களில் இருந்து 95 வீதமான மக்கள் வெளியேறிவிட்டதாக வடக்கு ஹாமாவின் கிளர்ச்சித் தலைவர் ஒருவரான அபூ அல்–பாரா அல் ஹமாவி குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...