ஆப்கானின் 4 மாகாணங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் | தினகரன்


ஆப்கானின் 4 மாகாணங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் நான்கு வட மாகாணங்களில் நீடிக்கும் மோதல்களில் பல பாதுகாப்பு படையினர் மற்றும் தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சாரேபுல் மாகாண தலைநகருக்கு படையினர் அனுப்பப்படாவிட்டால் அது தலிபான்களிடம் வீழ்ந்து விடும் என்று ஆப்கான் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு தலிபான்கள் கடந்த ஞாயிறன்று தாக்குதல்களை ஆரம்பித்தனர்.

ஜவ்ஸ்ஜான் மாகாணத்தின் பிரதான பகுதி தலிபான்களிடம் வீழ்ந்து விட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையிலான நீண்ட மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த வன்முறை வெடித்துள்ளது.

சாரேபுல் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் தலிபான்கள் ஒன்று திரண்டு வருவதாகவும் அரசு மேலதிக துருப்புகளை அனுப்பாத பட்சத்தில் மத்திய பகுதி வீழ்ந்துவிடும் என்றும் அந்த மாகாண அரசின் பேச்சாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகரின் மத்திய பகுதியில் இருந்து ஐந்து கிலோமீற்றருக்குள் சோதனைச்சாவடிகள் அமைத்திருப்பதாக தலிபான் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தவிர சமன்கன் மாகாணத்தின் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 14 பாதுகாப்பு தரப்பினர் கொல்லப்பட்டுள்ளனர். குன்துஸ் மாகாணத்தின் இராணுவத் தளம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 15 துருப்பினர் கொல்லப்பட்டனர்.

தலிபான்களுடனான அண்மைய மோதல்களில் அரச படை பின்னடைவை சந்தித்து வருகிறது. தலைநகர் காபுலுக்கும் நாட்டின் தென் பகுதிக்குமான பிரதான நெடுஞ்சாலை உள்ள கன்சி நகரை கடந்த ஓகஸ்டில் தலிபான்கள் சிறிது காலம் கைப்பற்றினர்.


Add new comment

Or log in with...