டிரம்புடன் புதிய சந்திப்புக்கு வடகொரிய தலைவர் கடிதம் | தினகரன்


டிரம்புடன் புதிய சந்திப்புக்கு வடகொரிய தலைவர் கடிதம்

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் மற்றொரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

எனினும் புதிய சந்திப்பொன்றுக்கு ஏற்கனவே திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவின் ‘அன்பு பாராட்டும்’ கடிதம் அந்த நாடு அணு ஆயுதக்களைவில் தொடர்ந்து தனது கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா சான்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு தலைவர்களும் கடந்த ஜுன் மாதம் வரலாற்று சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அணு ஆயுத ஒழிப்பு விவகாரம் பெரும் இழுபறிக்கு உள்ளாகி வந்தது.

“ஜனாதிபதியுடன் மற்றொரு சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்வதே இந்த கடிதத்தில் முக்கிய அம்சமாக உள்ளது. நாம் ஏற்கனவே இது பற்றி ஒருங்கிணைப்புடன் செயற்படுகிறோம்” என்று சான்டர்ஸ் குறிப்பிட்டார். எனினும் இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு குறித்து அவர் எந்த சமிக்ஞையையும் வெளிப்படுத்தவில்லை.

இந்த செய்தியை வரவேற்றிருக்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன், “கொரிய தீபகற்பத்தில் முற்றாக அணு ஆயுதக்களைவு அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.

சிங்கப்பூர் சந்திப்புக்கு தீர்க்கமான மத்தியஸ்த செயற்பாட்டில் ஈடுபட்ட மூன், வட கொரிய தலைவர் கிம்முடன் மூன்றாவது சுற்று சந்திப்பில் அடுத்த வாரம் ஈடுபடவுள்ளார்.

சிங்கப்பூர் சந்திப்பில் இரு தலைவர்களும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக்களைவுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். எனினும் அதற்கான காலம், விபரம் மற்றும் எந்த பொறிமுறைகள் பற்றிய விடயமும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை.


Add new comment

Or log in with...