ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் | தினகரன்


ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்

பெரிய நீலாவனை விசேட ,புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்

காத்தான்குடியில் நடைபெற்ற மின்னொளியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) கழகம் சம்பியனாக தெரிவானது.

காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்பட்டு வந்த 'KFDA வெற்றிக் கிண்ணம்-2018' மின்னொளி கற்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நடைபெற்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தும் 24 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டியில்

மருதமுனை கிறீன் மெக்ஸ் அணியும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது.

இந்த சுற்றுப் போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் (5) இரவு 8.30 மணிக்கு நடைபெற்றன,

முதல் அரை இறுதிப் போட்டி மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கும் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது இந்தப் போட்டி (01:01) என்ற கோல் சமநிலையில் முடிய தண்டனை உதை அறிவிக்கப்பட்டது. தண்டனை உதையிலும் (04:04) எனும் சமநிலையில் சவால் மிக்க போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. பின்னர் இரண்டு கழகங்களுக்கும் ஒவ்வொரு தண்டனை உதை சந்தர்ப்பங்கள் மீண்டும் வழங்கப்பட்டது. இதில் (05:04) என்ற கோல் வித்தியாசத்தில் தண்டனை உதை மூலம் கிறீன் மெக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி மோதியது. இந்த போட்டியில் (01:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வெற்றி பெற்று இறுதிப் - போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப் போட்டியில் முதல் பாதி வேளை நேரத்துக்குள் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடவில்லை. இரண்டாவது பாதி வேளை நேரத்திற்குள் வை.எஸ்.எஸ்.சி அணியின் முன் கள வீரர் எம்.எம்.முஸ்தாக் அடித்த கோலினால் (01-:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டது. இந்த அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன்

50000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணம் 30,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழக அணிக்கு வெற்றிக் கிண்ணம் 10,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலானா, கெளரவ அதிதி நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

சுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியின் வீரர் எம்.எம்.முஸ்தாக் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக கிறீன் மெக்ஸ் அணியின் கோல் காப்பாளர் தெரிவு செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...