ஸ்ரீலங்கா டெலிகொம் ஸ்பீட் அப் சைக்கிள் சவாரி குளியாப்பிட்டியில் நிறைவு | தினகரன்

ஸ்ரீலங்கா டெலிகொம் ஸ்பீட் அப் சைக்கிள் சவாரி குளியாப்பிட்டியில் நிறைவு

நாட்டின் நீண்டதூர சைக்கிளோட்டப் போட்டியான ஸ்ரீலங்கா டெலிகொம் நடத்தும் ‘ஸ்பீட் அப் சவாரிய’ கடந்த 8 ஆம் திகதிக குளியாப்பிட்டியில் நிறைவுபெற்றது.

மொத்தம் 5 நாட்கள் இடம்பெற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவத்தின் கியான் புஷ்பகுமார தட்டிச்சென்றர். அத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசையும் வென்றார்.

இலங்கை கடற்படையின் பிரபாத் மதுஷங்க இரண்டாம் இடத்தையும் இலங்கை துறைமுக அதிகார சபையின் வீரரான ரமேஷ் மூன்றாம் இடத்துடன் முறையே 5 இலட்சம் ரூபா, 3 இலட்சம் ரூபா பணப்பரிசுகளை வென்றனர்.

பெண்கள் பிரிவில் இலங்கை விமானப் படை வீராங்கனைகளான தினேஷா தில்ருக்ஷி, சுதாரிகா பிரியதர்ஷினி மற்றும் சுலோசனா பஞ்சாலி ஆகியோர் முதல் மூன்று இடங்களுடன் முறையே 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, 2 இலட்சம் ரூபா மற்றும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என பணப் பரிசுகளையும் வென்றனர். சைக்கிள் ஓட்ட பிரிவில் ஜி. பி. ஐ. ஆர். குமார முதலிடத்தையும், ஏ. எம். பி. கே. அத்தநாயக்க இரண்டாம் இடத்தையும் ஜே. உதயகுமார ஜயலத் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் பணப் பரிசில்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குளியாப்பிட்டி மேயர் லக்ஷ்மன் அதிகாரி, ஸ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பி. ஜி. குமாரசிங்க சிறிசேன, இலங்கை சைக்கிள் சம்மேளனத்தின் தலைவர் என். கருணாரத்ன ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்திபெரேர. ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா டெலிகொம்மின் குறூப் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அஜந்த செனவிரத்ன ஆகியோர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன.

ஆண்களுக்கான போட்டி கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து கடந்த 8 ஆம் திகதி 820 கிலோ மீற்றர் தூர சவாரியின் பின் குளியாப்பிட்டியில் நிறைவுபெற்றது.

பெண்களுக்கான போட்டி கொழும்பில் இருந்து குளியாப்பிட்டி வரையிலான 175 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களில் முடிவுற்றது. பெண்களுக்கான 175 கிலோ மீட்டர் இரு நாள் சைக்கிளோட்டப் போட்டி இலங்கையில் இடம்பெறுவது இது முதல் முறையாகும். பாரா சைக்கிளோட்ட போட்டி 75 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கி ஒரு நாள் போட்டியாகக் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது.

ஒட்டு மொத்த சிறந்த ஆண்கள் அணிக்கான விருதை இலங்கை துறைமுக அதிகாரசபை அணி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை இலங்கை இராணுவ அணியும் மூன்றாம் இடத்தை இலங்கை கடற்படை அணியும் வென்றன. கிங் ஒப் மவுன்டனாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வீரன் ரமேஷ் தெரிவானார். சிறந்த ஓட்டக்காரர் மற்றும் சிறந்த இளம் வீரர் ஆகிய இரு விருதுகளையும் இலங்கை கடற்படையின் பிரபாத் மதுஷங்கி வெற்றிபெற்றார்.

ஒட்டுமொத்த சிறந்த பெண்கள் அணியாக இலங்கை விமானப்படை அணியும் இரண்டாவது இடத்தை இலங்கை இராணுவ அணியும் மூன்றாம் இடத்தை இலங்கை கடற்படை அணியும் வெற்றிபெற்றன. சிறந்த ஓட்ட வீராங்கனையாக சுலோசனா பஞ்சலியும் சிறந்த இளம் வீராங்கனையாகவும் கிங் ஒப் மவுன்டன் வீராங்கனையாகவும் தினேஷா தில்ருக்ஷி தெரிவனார்.


Add new comment

Or log in with...