10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது | தினகரன்

10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது

10 வயது சிறுமியை பணிப்பெண்ணாக அனுப்பிய முகவர் கைது-Agent Arrested for Sendig 10 Yr Old Housemaid

 

ரிசானா நபீக்கை அனுப்பிய அதே முகவரே கைது

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2013 ஜனவரி 09 ஆம் திகதி, சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிய அதே முகவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளையைச் சேர்ந்த தம்பி லெப்பை அப்துல் சலாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்து, அதன் ஊடாக செல்லுபடியற்ற கடவுச்சீட்டை தயாரித்து சிறுமி ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பியமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 360 ஈ, குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (2) ஆம் பிரிவுக்கு அமைவாக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, CID யினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்கவால் நாளை (13) வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது  ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்திலிருந்து கடந்த மார்ச் 04 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில்  தங்கியுள்ள பெண் ஒருவர் தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாடொன்று வழங்கப்பட்டிருந்தது.

ஓமான் தூதரகத்தில் தஞ்சமடைந்த தற்போது 18 வயதுடைய, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் சேகு அப்துல் காதர் ரிஹானா என்பவர் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

இதனையடத்து, குறித்த பெண்ணிடம் மேலதிக வாக்குமூலம் ஒன்றினைப் பெற்று அனுப்புமாறு CID யினர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, கடந்த மார்ச் 10 ஆம் திகதி, அவரிடம் மேலதிக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

அச்சிறுமியிடம் முன்னெடுக்கப்ப்ட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில், அவர் 10 வயது சிறுமியாக இருந்த போது சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த வாக்குமூலத்திற்கு அமைவாக, கடந்த வருடம் (2017) ஜூலை 10 ஆம் திகதி இறுதியாக அந்த பெண் மருதானையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டுக்கு  சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தனது வீட்­டுக்கு அருகில் வசிக்கும்  உப முக­வ­ரான பெண் ஒருவர், கடந்த 2010 இல் தன்­னையும் மேலும் நான்கு சிறு­மி­க­ளையும் வெளி­நாட்­டுக்கு அனுப்பும் நோக்­குடன் கொழும்­புக்கு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்­றுக்கு தன்னை அழைத்து வந்­த­தாக பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தங்­களை பெயர், முக­வரி தெரி­யாத நபர் ஒரு­வ­ரிடம் அழைத்து சென்­ற­தா­கவும், அதன் பின்னர் அவரின் ஆலோ­சனைப் படி தங்­கு­மி­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

இதன்­போது, கடவுச்சீட்டொன்றை (896416758V எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தைக்கொண்ட கடவுச்சீட்டு) தனக்கு தந்­த­தா­கவும் அதில் தனது புகைப்­படம் பெயர் என்­பன இருந்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

அதில் அவரது பிறந்த திகதி 1989.05.20 என குறிப்பிடப்பட்டுள்ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

எனினும் பாதிக்­கப்­பட்ட யுவ­தி­யியின் உண்­மை­யான பிறந்த திகதி 2000.11.15 எனவும், இந்த கடவுச்சீட்டை அவர் பெறும்போது அவ­ருக்கு 10 வயது எனவும் CID யினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

போலி பிறப்புச் சான்­றிதழ் ((1762 இலக்கம்) போலி அடை­யாள அட்டை (896416758V) ஆகி­ய­வற்றை வைத்தே போலி­கடவுச்சீட்டும் (N4152293) பெறப்­பட்­டுள்­ளதை CID யினரின் விசா­ர­ணை­களில் தெரிய வந்துள்ளது.

அதன்­படி குறித்த பெண், 2010.08.10 ஆம் திகதி 10 வயது சிறு­மி­யாக இருந்த போது சவூதி அரே­பி­யா­வுக்கு போலி கடவுச்சீட்டின் மூலம் வீட்டுப் பணிப் பெண்­ணாக அனுப்­பப்பட்­டுள்­ள­தோடு, அங்கு அவர் இரு வரு­டங்கள் பணிபுரிந்த நிலையில் நாடு திரும்பி மீண்டும், குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்­றுள்­ளமை தெரிய வந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிக்­கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண விசாவில் துபாய் சென்ற குறித்த சிறுமி, துபாயிலிருந்து பெண் ஒருவர் மூலம் வாகனமொன்றில் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மற்றுமொரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் ஓமானிலுள்ள குறித்த பெண் அச்சிறுமியை பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த வேளையில் அங்கு இடம்­பெற்ற கொடு­மை­களை சகிக்க முடி­யாமல் சிறுமி இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில், இறுதியாக ஓமானிலுள்ள தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அதன் அடிப்படையில், மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரான குறித்த முகவர் CID யினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த நபர் இதற்கு முன்னர் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சிறுமி ரிஸானா நபீக்கை, போலி ஆவணங்கள் ஊடாக சவூதிக்கு அனுப்பியவர் என, சி.ஐ.டி. விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

1988 பெப்ரவரி 04 இல் பிறந்த கிண்ணியா, மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கை அவரது 17 ஆவது வயதில் (2005 மே 04) அவர் 1982.02.02 இல் பிறந்தவர் என தெரிவித்து போலி கடவுச்சீட்டு மூலம் பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

கடந்த 2005 மே 22 இல், ரிசானா, வீட்டு எஜமானியின் குழந்தைக்கு போத்தலில் பாலூட்டிக் கொண்டிருந்த வேளையில், குழந்தை மூச்சுத் திணறி இறந்துள்ளது.

இதனையடுத்து சுமார் 8 வருடங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், கடந்த 2013 ஜனவரி 09 ஆம் திகதி ரிசானா நபீக் மரண தண்டனைக்குள்ளானார்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

 


Add new comment

Or log in with...