கோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE) | தினகரன்

கோத்தாபயவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு (UPDATE)

கீத் நொயார் கடத்தல் சம்பவம்; கோத்தாபய CID யில் முன்னிலை-Keith Noyahr Abduction Gotabaya Appeared Before CID

 

கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவிடம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (12) காலை 10.00 மணியளவில் குற்றவியல் திணைக்கள விசாரணையில் முன்னிலையான கோத்தாபய ராஜபக்ஷ, சற்று முன்னர் அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 

கீத் நொயார் கடத்தல் சம்பவம்; கோத்தாபய CID யில் முன்னிலை (10.17am)

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில், கடந்த ஓகஸ்ட் 17 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம், அவரது விஜேராம இல்லத்தில் வைத்து CID யினர் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடமும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும், மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, அவர் இன்று (12) கொழும்பிலுள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கீத் நொயாரின் கடத்தல் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவிடமும் CID யினர் வாக்குமூலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் கீத் நொயார், கடந்த கடந்த 2008, மே 22 ஆம் திகதி, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்திற்கு, உதவி, ஒத்தாசை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதி இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை (10) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...