பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது | தினகரன்


பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது

பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது-Saliya Perera Drug Trafficker Arrested

 

இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையினால், சர்வதேச பொலிசாரின் பிடியாணை கோரிக்கை பிறப்பிக்கப்பட்ட டப்ளியூ.ஏ. சாலிய பெரேரா எனப்படும் குறித்த நபர், சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்திற்கு தப்பிச்சென்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சாலிய பெரேரா, ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, இலங்கை பொலிசார், அறிவித்திருந்ததாக, அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது-Saliya Perera Drug Trafficker Arrested

தாய்லாந்தின் குடியேற்ற காரியாலயம், சுற்றுலா பொலிசார் மற்றும் விசேட செயற்பாட்டு பிரிவு ஆகியவற்றின் உதவியுடன், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தாய்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு, சுற்றுலா வீசாவில் பெங்கொக் சென்றுள்ள குறித்த சந்தேகநபர், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீசாவை புதுப்பித்துள்ளார். சர்வதேச பொலிசாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிப்பதைத் தவிர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் (08) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு அவசியமான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
 


Add new comment

Or log in with...